மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 31 மா 2020

இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது!

இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது!

இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் இனிமேல் என்னால் நடிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார் நடிகர் வடிவேலு.

நகைச்சுவை நடிகர் வடிவேலு சிம்பு தேவன் இயக்கத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' படத்தின் மூலம் ஹீரோவாக புதிய பரிமாணத்தில் திரையில் தோன்றினார். இந்தப் படம் எதிர்பாராத அளவிற்கு வெற்றி பெறவே அதே டீம் இணைந்து இதன் இரண்டாம் பாகத்தை 'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி' என்ற பெயரில் தயாரிக்க முடிவு செய்தனர். இதற்காக, வடிவேலுவுக்கு ரூ.1.50 கோடி சம்பள முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்தார் ஷங்கர். சென்னை அருகே ரூ.6 கோடி செலவில் பிரமாண்டமான அரங்கு அமைத்து படப்பிடிப்பைத் தொடங்க ஏற்பாடு நடந்தது.

ஆனால் திரைக்கதையில் தலையிடுவதாகவும், கொடுத்த உடைகளை அணிய மறுப்பதாகவும் படத்தின் இயக்குநர் சிம்புதேவன், வடிவேலு மீது புகார் கூறினார். இதையடுத்து இயக்குநர் ஷங்கர் படப்பிடிப்பை நிறுத்தச் சொன்னதாகவும் செய்தி வெளியாகியது. அதேபோல் படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமலும், படக் குழுவுக்குப் போதிய ஒத்துழைப்பு தராமலும் இருந்துவந்ததாக வடிவேலு மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, வடிவேலு மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இயக்குநர் ஷங்கர் புகார் அளித்தார். 'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி' படப்பிடிப்பில் வடிவேலு கலந்துகொள்ள மறுத்தால், அரங்கு அமைக்கத் தயாரிப்பாளர் செலவிட்ட ரூ.6 கோடியையும், அட்வான்ஸ் தொகையையும் சேர்த்து வட்டியுடன் ரூ.9 கோடியை வடிவேலு திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டிருந்தார். இதையடுத்து நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பி வடிவேலுவிடம் விளக்கம் கேட்டது.

இது குறித்து தற்போது நடிகர் சங்கத்திற்கு கடிதம் அனுப்பியுள்ள வடிவேலு, "இம்சை அரசன் 24ஆம் புலிகேசியில் நடிக்க 1-6-2016இல் ஒப்புக்கொண்டேன். 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் படத்தை முடித்துவிடுவதாகவும், அதுவரை வேறெந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ள வேண்டாம் என்றும் என்னிடம் உறுதி அளித்ததால், வேறு படங்களில் நடிப்பதை நான் தவிர்த்தேன். ஆனால் டிசம்பர் 2016 வரை படத்தைத் தொடங்காமலே காலம் தாழ்த்தினர். இருந்தாலும், தயாரிப்பாளர் மற்றும் சினிமா தொழிலின் நலன் கருதி, அதன் பிறகும் பல்வேறு தேதிகளில் அந்தப் படத்தில் நடித்துக்கொடுத்தேன். இந்நிலையில், என்னுடைய பிரத்யேக ஆடை வடிவமைப்பாளரை எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் நீக்கியது. அத்துடன், தீய நோக்கத்தோடு எனது புகழுக்கும் பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கடிதத்தைக் கொடுத்து, ஏதோ எனக்கு இந்த ஒரு படத்தின் மூலம்தான் சினிமா உலகில் புகழ் ஏற்பட்டது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கியுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

"நான் நடித்துத் தர மறுத்திருந்தால், பட நிறுவனம் டிசம்பர் 2016க்குள் ஏன் புகார் தரவில்லை? ஒப்பந்த காலம் முடிந்து ஒரு வருடத்திற்குப் பிறகு தீய நோக்கோடு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு, 2016 - 2017 ஆண்டு காலங்களில் பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஒப்புக்கொள்ளாமல் இருந்தேன். இதனால் எனக்கு பொருளாதார இழப்பும், மன உளைச்சலும் ஏற்பட்டது. இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று நடிகர் சங்கம் என்னை வற்புறுத்துவதற்கு முன்பு, என்னை அழைத்துக் கருத்து கேட்காதது விதிகளுக்கு முரணானது. இந்தப் படத்தில் நாசர் நடிப்பதால், நடிகர் சங்க நலனுக்காக அவரால் செயல்பட முடியாத நிலைமை உள்ளது. இதில் தொடர்ந்து நடித்தால், நான் ஒப்பந்தமாகி உள்ள வேறு படங்கள் பாதிக்கப்படும். பொருளாதார, குடும்பச் சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணங்களால், ‘இம்சை அரசன் 24ஆம் புலிகேசி’ படத்தில் மேற்கொண்டு நடிக்க நாட்கள் ஒதுக்க இயலாத நிலையில் உள்ளேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon