மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 31 மா 2020

ஏடிஎம் இருக்கு... ஆனா பணம் இல்ல!

ஏடிஎம் இருக்கு... ஆனா பணம் இல்ல!

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஏடிஎம் எந்திரங்கள் பணமில்லாமல் இருப்பதால் மக்கள் பெரிதும் அவதியுற்றுள்ளனர். இப்பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறி மத்திய மோடி அரசு ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளைச் செல்லாதவையாக அறிவித்தது. இதன் பின்னர் நாட்டில் கடுமையான பண நெருக்கடி ஏற்பட்டது. வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை ஏடிஎம்களில் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. ரூ.100 நோட்டுகளும் போதிய அளவில் ஏடிஎம்களில் கிடைக்கவில்லை. அதன் பின்னர் மதிப்பழிப்பு செய்யப்பட்ட நோட்டுகளுக்கு மாற்றாகப் புதிய வடிவிலான ரூ.500 நோட்டுகளும் ரூ.2,000 நோட்டுகளும் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டன. இவை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும் மக்களின் பண நெருக்கடிப் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்னமும் பணமில்லாமலேயே ஏடிஎம் எந்திரங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

டெல்லி, உத்தரப் பிரதேசம், தெலங்கானா, குஜராத், சட்டிஷ்கர், பீகார் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இன்னமும் ஏடிஎம் எந்திரங்களில் பணத் தட்டுப்பாடு நிலவுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் இப்பிரச்சினை குறித்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் பணத் தட்டுப்பாடு நிலவுவதாக அம்மாநில முதல்வரே பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். ஏடிஎம்களில் பணமில்லாத இச்சூழலை எதிர்க்கட்சியினரும் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி வங்கிக் கட்டமைப்பையே சீரழித்துவிட்டதாகவும், ரூ.13,700 கோடியைச் சுருட்டிக்கொண்டு வெளிநாடு தப்பிச் சென்ற நீரவ் மோடி குறித்து இந்த மோடி வாய் திறக்கவே இல்லை எனவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார். அதோடு, மக்களின் பணத்தை வாங்கி நீரவ் மோடியிடம் கொடுத்துவிட்டதாகவும் அவர் புகார் கூறுகிறார். 2016ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் காலியாக இருந்த ஏடிஎம் எந்திரங்கள் இப்போதும் காலியாகத்தான் இருக்கின்றன என்று இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இவ்வாறாக நாடு முழுவதும் பெரும்பாலான ஏடிஎம்களில் பணப் பற்றாக்குறை நிலவுகிறது. சென்னையைப் பொறுத்தவரையில் பெரும்பாலானோர் ஓரளவுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மாறியுள்ளதால் முன்புபோல அதிகளவில் ஏடிஎம் எந்திரங்களை நாடுவதில்லை. சிறு தொகையை எடுப்பவர்கள் மட்டுமே பெரும்பாலும் ஏடிஎம் செல்கின்றனர். ஒரு சில ஏடிஎம்களில் ரூ.100 உள்ளிட்ட குறைந்த மதிப்பிலான நோட்டுகள் வருவதில்லை. சில ஏடிஎம்களில் ரூ.100 நோட்டுகள் வரும்; ரூ.2000 நோட்டுகள் வருவதில்லை. சில ஏடிஎம்கள் மாலை வேளைகளில் பூட்டிக் கிடக்கின்றன. சென்னையில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை என்றுதான் கூற வேண்டும்.

ஏடிஎம்களில் நிலவும் இந்த நிதி நெருக்கடியானது தற்காலிகமான ஒன்றுதான் எனவும் விரைவில் அது சீர்செய்யப்பட்டு விடும் எனவும் மத்திய நிதியமைச்சரான அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதேபோலத்தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் நம்பிக்கை கூறிவருகிறார். ஆனால் நிதி நெருக்கடி நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon