மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 31 மா 2020

இரட்டை இலை வழக்கு: புதிதாக இணைந்த கே.சி.பழனிசாமி

இரட்டை இலை வழக்கு: புதிதாக இணைந்த கே.சி.பழனிசாமி

இரட்டை இலை தொடர்பான வழக்கு விசாரணையை வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது டெல்லி உயர் நீதிமன்றம். முன்னதாக, இன்று (ஏப்ரல் 17) நடந்த இந்த வழக்கு விசாரணையில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார் கே.சி.பழனிசாமி.

2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதியன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு, முதலமைச்சராகப் பதவியேற்றார் ஓ.பன்னீர்செல்வம். அதிமுக பொதுச் செயலாளராக இருந்த சசிகலாவுடன் முரண்பட்டு, அவர் தனி அணியாகப் பிரிந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதியன்று சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். இரண்டு அணிகளாகச் செயல்பட்டதால், ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை முடக்கப்பட்டது.

அதன் பின்னர் இடைத்தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். இதன் தொடர்ச்சியாக, ஏப்ரல் மாதம் அதிமுகவிலிருந்து டிடிவி தினகரனை ஒதுக்கி வைப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சர்கள் குழு முடிவு செய்தது. இதனால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், தினகரன் என மூன்று அணிகளாக அதிமுக பிரிந்தது.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் ஒன்றாக இணைந்தன. இதனையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகப் பொறுப்பேற்றார். மேலும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் நியமிக்கப்பட்டனர். இதற்கேற்ப, இக்கட்சியின் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுத் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் மாதம் தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிக்கு அதிமுகவின் கட்சிப் பெயர், இரட்டை இலைச் சின்னம் மற்றும் கொடியைப் பயன்படுத்தும் உரிமை வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் தினகரன். மேலும், குக்கர் சின்னத்தை தனது அணிக்கு தற்காலிகமாக ஒதுக்குமாறு நீதிமன்றத்தில் மனு செய்தார்.

இந்த வழக்கில், தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அதிமுகவின் சார்பில் மதுசூதனன் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து, இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கை வரும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டுமென டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

இந்த வழக்கின் விசாரணை, இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் தன்னையும் இணைத்துக்கொண்டார் அதிமுகவின் முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட, மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அதிமுக ஆதரிக்க வேண்டுமெனக் கூறியதற்காக, இவர் அக்கட்சியிலிருந்து கடந்த மாதம் நீக்கப்பட்டார்.

இரட்டை இலை வழக்கில் வாதாடிய கே.சி.பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், அதிமுகவின் பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டுமென்று தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தை மீண்டும் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டுமென்றும் அவர் தரப்பில் வாதிடப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளைப் புதிதாகக் கொண்டுவந்தது தேர்தல் ஆணையத்தினால் அங்கீகரிக்கப்படவில்லை என்றும், இந்த உண்மை தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாகத் தெரியவந்துள்ளது என்றும் ஏற்கனவே செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார் கே.சி.பழனிசாமி.

விசாரணையின் முடிவில், இந்த வழக்கு ஏப்ரல் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

இரட்டை இலைச் சின்னம் வழக்கில் கே.சி.பழனிசாமி தன்னை இணைத்துக்கொண்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். அப்போது, கே.சி.பழனிசாமியை நாங்கள் (அதிமுக) என்றும் ஏற்றுக்கொண்டதில்லை என்று அவர் தெரிவித்தார். “அணிகள் இணைந்தபோது, அவராகவே வந்து ஒட்டிக்கொண்டார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவினால் 1994ஆம் ஆண்டு கட்சியை விட்டே நீக்கப்பட்டவர் அவர். கே.சி.பழனிசாமி அதிமுக உறுப்பினர் கிடையாது. அவருக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை” என்று கூறினார் சி.வி.சண்முகம்.

இரட்டை இலை வழக்கு விசாரணை சூடு பிடித்துள்ள நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளதா என்பது குறித்து இனிவரும் நாட்களில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon