மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 2 ஜூலை 2020

பேராசிரியை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

பேராசிரியை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக பேராசிரியை நிர்மலா தேவி மீது தொடரப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி ராஜேந்திரன் இன்று(ஏப்ரல் 17) உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேவாங்கர் கலை அறிவியல் கல்லூரியில் கணிதத் துறை உதவி பேராசிரியையாக பி.நிர்மலா தேவி (48) பணிபுரிந்து வருகிறார். இவர் கல்லூரியில் பயிலும் மாணவிகளை கடந்த மாதம் 15ஆம் தேதி செல்பேசியில் தொடர்புகொண்டு, பாலியல் தொழிலுக்கு அழைத்துள்ளார். அது வாட்ஸ் அப்பில் ஆடியோவாக வெளியாகியது. இந்த சம்பவம் குறித்து மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் கல்லூரி நிர்வாகம் உதவி பேராசிரியை நிர்மலாவை 15 நாட்கள் பணியிடை இடைநீக்கம் செய்தது. அவரிடம் விசாரணை நடத்தியபோது, மாணவிகளிடம் பேசியதை ஒப்புக்கொண்டார். ஆனால் ,தான் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதாக விளக்கம் அளித்தார். நேற்று காலை (ஏப்ரல் 16) பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள், மாதர் சங்கத்தினர் மற்றும் இந்திய மாணவர் சங்க அமைப்பினர் இணைந்து தேவாங்கர் கல்லூரி முன்பாக போராட்டம் நடத்தினர். கல்லூரி முதல்வர் பேராசிரியை நிர்மலா தேவி மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 370, 511 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்ட பிரிவி 67இன் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஏடிஎஸ்பி மதி தலைமையிலான போலீஸார் அருப்புக்கோட்டையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி வீட்டிற்குச் சென்றனர். ஆனால், வீட்டுக்குள் இருந்து வெளியே வர அவர் மறுத்துவிட்டார். 6 மணி நேரம் காத்திருந்த போலீஸார், வீட்டின் கதவை உடைத்து அவரைக் கைது செய்தனர். அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது. மேலும், அவரிடமிருந்து செல்பேசி பறிமுதல் செய்யப்பட்டது. செல்பேசியில் நிறைய பெண் புகைப்படங்கள் இருப்பதாகவும்,உயரதிகாரிகளின் செல்பேசி எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால்,மாணவிகளிடம் தவறாக பேசவில்லை என நிர்மலா தேவி வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அவர் கணவரிடம் விசாரித்த போது, கருத்து கூற விருப்பமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மாணவர்களைத் தவறாக வழி நடத்திய நிர்மலா தேவியை கண்டித்து இன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் எனப் பேராசிரியர்கள் வலியுறுத்தினர்.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையிலான விசாரணை ஆணையத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்து உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில் அமைக்கப்பட்ட ஐவர் குழுவை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் திடீரென வாபஸ் பெற்றது. ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்துக்கு முழு ஒத்துழைப்பு தரப்படும் என பல்கலைக்கழக துணை வேந்தர் செல்ல துரை ஆளுநரிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, மேல் விசாரணைக்காக சிபிசிஐடிக்கு வழக்கை மாற்றி டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon