மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 2 ஜூலை 2020

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்!

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்!

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று (ஏப்ரல் 17) நடைபெற்ற சித்திரை தேரோட்ட விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெறும் விழாக்களில் பூச்சொரிதல் விழா, சித்திரை தேரோட்டம் ஆகியவை மிகவும் பிரசித்தி பெற்றது.

சமயபுரம் மாரியம்மன் கோயிலின் சித்திரை பெருந்திருவிழா ஏப்ரல் 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை காலையில் பல்லக்கிலும், இரவில் பல்வேறு வாகனங்களிலும் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நேற்று (ஏப்ரல் 16) காலை 10 மணிக்கு பல்லக்கிலும், இரவில் வெள்ளி குதிரை வாகனத்திலும் புறப்பாடாகி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 10.30 மணிக்குத் தொடங்கியது.

மூலஸ்தானத்தில் இருந்து அம்மன் புறப்பாடாகி திருத்தேரில் எழுந்தருளினார். இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

சமயபுர மாரியம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏப்ரல் 20ஆம் தேதி தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் குமரதுரை மற்றும் கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon