மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

தைரியமாக முன்வந்த விஜய் சேதுபதி

தைரியமாக முன்வந்த விஜய் சேதுபதி

8 வயதுச் சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் எந்த தண்டனை கொடுத்தாலும் போதுமானதாக இருக்காது என்று தெரிவித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

ஸ்டன்ட் யூனியன் துவங்கப்பட்ட நாளான இன்று அதன் 51ஆவது தின விழா சென்னை வடபழனியில் உள்ள ஸ்டன்ட் யூனியன் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர் விக்ரமன் உள்ளிட்ட ஏராளமான திரைக் கலைஞர்கள் கலந்துகொண்டனர். இவ்விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய் சேதுபதி ரத்த தானம் செய்தார். இதையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், "படப்பிடிப்பின்போது சண்டைக் காட்சிகளில் எங்களுக்காக தினம் தினம் எவ்வளவோ ரத்தத்தை நீங்கள் இழந்துகொண்டிருக்கிறீர்கள். உங்கள் விழாவில் நான் கலந்துகொண்டு ரத்த தானம் செய்ததை உங்களுக்கு நான் செலுத்தும் நன்றிக்கடனாக நினைக்கிறேன். இது மாதிரி ஒவ்வொரு வருடமும் ரத்த தானம், கண் தானம் செய்து மற்றவர்களையும் இது போல் செய்யும்படி வலியுறுத்துங்கள்" என்று கூறினார்.

இதையடுத்து காஷ்மீர் சிறுமியின் மரணம் பற்றி கருத்து தெரிவித்த விஜய் சேதுபதி, "8 வயதுச் சிறுமியின் மரணத்தைக் கேட்கும்போது மனம் கலங்குகிறது. மரணத்திற்குக் காரணமானவர்களைப் பார்த்தால் ஆத்திரம்தான் வருகிறது. மதம், ஜாதி என்று புதிய புதிய பிரச்சினைகளுக்கு திசைதிருப்பப் பார்க்கிறார்கள். மக்கள் பிரச்சினை, வேலைவாய்ப்பு, விவசாயி பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை இதையெல்லாம் கண்டுகொள்வது கிடையாது. இதையெல்லாம் திசைதிருப்பவே மதம், ஜாதியினைக் கையில் எடுக்கிறார்கள். நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். பெண் குழந்தைகளை வளர்க்க ஒரு பாடம் எடுக்க வேண்டும். மனிதனாக எப்படி நடந்துகொள்வது என்று யாருக்கும் தெரியவில்லை. 8 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்முறை செய்து கொலை செய்த விவகாரத்தில் எந்த தண்டனை கொடுத்தாலும் அவர்களுக்குப் பத்தாது" என்று தன் ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளார்.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon