மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 17 ஏப் 2018

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்: தனிச்சட்டம் தேவை!

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்: தனிச்சட்டம் தேவை!

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க உடனடி தண்டனை கிடைக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு வலியுறுத்தியுள்ளார்.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகள் 4பேரை பாலியல் தொழிலுக்கு அழைக்கும் செல்போன் உரையாடல் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கத்துவா சிறுமி விவகாரம் மற்றும் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சார்பில் இன்று (ஏப்ரல் 17) சேப்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு, ஜான்சிராணி உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து கொளுத்தும் வெயிலில் சேப்பாக்கம் சாலையில் மறியலில் ஈடுபட்ட அவர்கள், பெண்கள் வன்கொடுமைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களும் எழுப்பினர்.

இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு, "இன்று தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தவறு யார் செய்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவாக இந்த அரசு செயல்படுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு, உடனடியாக தண்டனை அளிக்கும் சட்டங்கள் கொண்டுவர வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

"மத்தியில் ஆளும் மோடி அரசாக இருந்தாலும் சரி, மாநிலத்தில் ஆளக்கூடிய எடப்பாடி-பன்னீர் ஆட்சியாக இருந்தாலும் சரி பதவி மீதே குறியாக உள்ளனர். அவர்களுக்கு மக்கள் பணியாற்ற வேண்டும் என்னும் எண்ணம் சிறிது கூட இல்லை என்றும் குறிப்பிட்ட அவர், தற்போது பெண்கள் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல்கொடுக்க பெண்களே முன்வந்துள்ளனர். வன்கொடுமைகளைத் தடுக்க மக்களின் மனநிலையில் மாற்றம் வர வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon