மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 31 மா 2020

ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்: எம்பிக்களுக்குக் கோரிக்கை!

ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்: எம்பிக்களுக்குக் கோரிக்கை!

நாட்டின் பொருளாதாரம், பெண்கள் பாதுகாப்பு போன்றவை கடுமையான நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ள யஷ்வந்த் சின்ஹா, “தயவுசெய்து பேசுங்கள்” என பாஜக எம்பிக்களை வலியுறுத்தியுள்ளார்.

பாஜக மூத்த தலைவரும், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நிதி அமைச்சராக இருந்தவருமான யஷ்வந்த் சின்ஹா, மோடி தலைமையிலான தற்போதைய பாஜக ஆட்சியைத் தொடர்ந்து விமர்சித்துவருகிறார்.

இந்நிலையில், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் இன்று (ஏப்ரல் 17) அவர் எழுதியுள்ள கட்டுரையில், மத்திய அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளதுடன் பாஜக எம்பிக்கள் தைரியமாக பேச வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பாஜக எம்பிக்களுக்காக எழுதியுள்ள அந்தக் கட்டுரையில், “2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வெற்றிக்காக நாம் கடுமையாக உழைத்தோம். தேர்தல் வெற்றிக்குப் பின்னர் புதிய மற்றும் மகத்தான சகாப்தம் தொடங்கவுள்ளதாக எதிர்பார்த்தோம். பிரதமர் மற்றும் அவரது அணியை முழு நம்பிக்கையோடு ஆதரித்தோம். தற்போது, இந்த அரசு 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 5 பட்ஜெட்களையும் தாக்கல் செய்துள்ளது. தனது முடிவுகளைக் காட்டுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் அரசு பயன்படுத்தியுள்ளது. ஆனால் இறுதியில், நமது பாதையையும் வாக்காளர்களின் நம்பிக்கையையும் நாம் தொலைத்துவிட்டோம்” என்று வேதனையோடு குறிப்பிட்டுள்ளார்.

நாடு பொருளாதார வளர்ச்சியில் முதல் இடத்தில் உள்ளதாக அரசு கூறிவரும் நிலையில் உண்மை வேறு விதமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், “ பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் நாட்டின் வங்கிகளில் இவ்வளவு வாராக்கடன் இருக்காது. மேலும் விவசாயிகள் துயர் இருக்காது. இளைஞர்கள் வேலையின்றி இருக்க மாட்டார்கள், சிறு தொழில்கள் அழிக்கப்படாது.. ஊழல்கள் அதிகரித்துள்ளது. ஊழல்வாதிகள் நாட்டை விட்டுத் தப்பிச் செல்கின்றனர். ஆனால் அரசாங்கங்கள் எதுவும் செய்ய முடியாமல் வேடிக்கை பார்க்கின்றன” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக வேதனை தெரிவித்துள்ள யஷ்வந்த் சின்ஹா, “தற்போது பெண்கள் மிகவும் பாதுகாப்பின்றி உள்ளனர். இதுவரை அப்படி இருந்தது இல்லை. பாலியல் பலாத்காரம் என்பது தினசரி நிகழ்வாகிவிட்டது. இதைத் தடுக்க முடியாமல், வருத்தம் தெரிவித்துக்கொண்டு இருக்கிறோம். சில வழக்குகளில், நமது மக்களே ஈடுபட்டுள்ளனர். சிறுபான்மையினர் விலக்கப்பட்டுள்ளனர். தலித் மற்றும் பழங்குடியினர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

பாஜகவில் உட்கட்சி ஜனநாயகம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாக வேதனை தெரிவித்துள்ள அவர், “நாடாளுமன்றக் கூட்டத்தில், தங்களின் கருத்தைத் தெரிவிக்க எம்பிக்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. உங்களுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் பிரதமர் உள்ளார். கட்சி தலைமை அலுவலகம் கார்ப்பரேட் அலுவலகமாக மாறியுள்ளது. சிஇஒவை பார்ப்பது என்பது கடினமாக உள்ளது. நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதாக நீதிபதிகள் தெரிவிக்கின்றனர். தேசத்தின் நன்மைக்காக நீங்கள் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தங்கள் சமூகத்தினருக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதற்காக அரசுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட பிரிவை சேர்ந்த ஐந்து எம்பிக்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். எனவே, நீங்களும் உங்கள் கருத்தை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். நீங்கள் அமைதியாக இருந்தால், நாட்டுக்கு எதிராக மிகப் பெரிய கெடுதியைச் செய்கிறீர்கள் என்று அர்த்தம். எதிர்கால சந்ததியினர் உங்களை மன்னிக்க மாட்டார்கள். தேசிய நலன் தொடர்பாக ஒரு முடிவு எடுப்பதற்காக அத்வானி மற்றும் ஜோஷியை நான் தனிப்பட்ட முறையில் வேண்டுகிறேன்.

சிறு வெற்றிகள் கிடைத்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், பெரிய தோல்விகளை அவற்றை முற்றிலும் மறைக்கின்றன. இந்த கடிதத்தில் நான் எழுப்பியுள்ள பிரச்சினைகளுக்கு நீங்கள் முக்கியத்துவம் தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். தயவுசெய்து தைரியத்தை வரித்துக்கொள்ளுங்கள், பேசுங்கள், நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றுங்கள்” என்று கூறியுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் எழுதிய கடிதத்தில், பொருளாதார கொள்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோரை யஷ்வந்த் சின்ஹா கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon