மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

ராஜேஸ்வரியை கருணைக்கொலை செய்ய பக்தர்கள் எதிர்ப்பு!

ராஜேஸ்வரியை கருணைக்கொலை செய்ய பக்தர்கள் எதிர்ப்பு!

நோய் வாய்ப்பட்ட சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானையை கருணைக்கொலை செய்ய பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானை ராஜேஸ்வரி உடல்நலம் பாதிக்கப்பட்டு, கடந்த ஒருமாதமாகப் படுக்கையில் உள்ளது. கோரிமேடு அருகேயுள்ள ஷெட்டில் வைத்து, கால்நடை மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். ஆனால், யானையின் உடல் நலத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. சென்னை வனவிலங்கு சிறப்பு சிகிச்சையியல் துறை நிபுணர் உட்படக் கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் யானையை கருணைக்கொலை செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் கோயில் யானை ராஜேஸ்வரியை கருணைக் கொலை செய்ய வேண்டும் எனவும், யானையைப் பரிசோதித்து அறிக்கை பெற்ற பின் விதிகளைப் பின்பற்றி கருணைக் கொலை செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அதோடு யானை குணமடைய வேண்டும் என்று வழிபட்டு வருகின்றனர். யானைக்கு போதிய சிகிச்சை அளிக்கவில்லை என்றும் அதனை கருணைக்கொலை செய்யாமல் இயற்கையாகவே இறக்க விட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து யானையை பராமரித்து வந்த பாகன் பாஸ்கரன், ராஜேஸ்வரியை கடந்த 8 ஆண்டுகளாக பராமரித்து வந்தேன். காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அதனை ஜேசிபி மூலம் புரட்டிப் போட்டதால்தான் எழும்பு முறிவு ஏற்பட்டது.

ஆனால் இந்து அறநிலையத் துறை இதற்கு போதுமான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது யானையை கருணைக்கொலை செய்வது வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon