மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 21 செப் 2020

உத்தரவு அடிப்படையில் தரவரிசைப் பட்டியல்: தமிழக அரசு!

உத்தரவு அடிப்படையில் தரவரிசைப் பட்டியல்: தமிழக அரசு!

மருத்துவ மேற்படிப்பில் சேர, கூடுதல் மதிப்பெண்கள் வழங்குவதற்காகத் தொலை தூரப் பகுதி மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகளை வகைப்படுத்த பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பிறப்பிக்கும் உத்தரவுக்குப் பிறகே மாணவர்கள் தரவரிசைப் பட்டியல் வெளியிட முடியும் எனத் தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ மேற்படிப்பில் சேர, தொலைதூரப் பகுதி மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 10 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.

2018- 19ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக, அரசு மருத்துவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், எந்தெந்தப் பகுதிகள் தொலைதூரப் பகுதிகள், எளிதில் அணுக முடியாத பகுதிகள் என வகைப்படுத்திக் கூடுதல் மதிப்பெண் வழங்குவது தொடர்பாக கடந்த 23ஆம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி காஞ்சிபுரம், திருப்பூர், தஞ்சாவூர் மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களாகப் பணியாற்றும் பிரவீண் உள்பட 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி கல்யாண சுந்தரம் முன்பு கடந்த மார்ச் 29 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “புவியியல் அமைப்பின் அடிப்படையில் மருத்துவ சேவைகள் சென்றடைய இயலாத பகுதிகளையே எளிதில் அணுக முடியாத, தொலைதூரப் பகுதிகளாக அறிவிக்க வேண்டுமே தவிர, மருத்துவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் அறிவிக்கக் கூடாது” என்று வாதிட்டார்.

இந்த வழக்கு, நீதிபதி வைத்தியநாதன் முன் மீண்டும் இன்று (ஏப்ரல் 17) விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையில், சலுகை மதிப்பெண்கள் வழங்கி, மாணவர்கள் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 26ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon