மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 21 செப் 2020

ஏர் இந்தியா: ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்து!

ஏர் இந்தியா: ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்து!

பங்கு விற்பனைக்குத் தயாராக உள்ள ஏர் இந்தியா விமான நிறுவனத்தைத் திறனுடைய இந்திய நிறுவனம்தான் வாங்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா விமானப் போக்குவரத்து நிறுவனம் ரூ.50,000 கோடிக்கும் மேலான கடன் சுமையில் இருக்கிறது. இதன் பங்குகளை விற்பனை செய்துத் தனியார்மயமாக்க மத்திய அரசு முயன்று வருகிறது. இந்நிலையில் ஏர் இந்தியா விற்பனை குறித்து மோகன் பகவத் கருத்துத் தெரிவித்துள்ளார். மும்பையில் ஏப்ரல் 17ஆம் தேதி ’இந்திய பொருளாதாரம் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள்: நீண்ட காலப் பார்வை’ என்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர், “ஏர் இந்தியா நிறுவனத்தை இயக்குபவர் கண்டிப்பாக இந்தியராக இருக்க வேண்டும். அந்நிறுவனத்தை இயக்கும் முழுத் திறனையும் கொண்டிருக்க வேண்டும்.

உலகின் எந்தவொரு நாட்டிலும் தேசிய விமான நிறுவனத்தில் அந்நிய நிறுவனங்கள் 49 சதவிகிதத்துக்கும் மேலான பங்குகளை வைத்திருக்க முடியாது. குறிப்பாக ஜெர்மனியில் 29 சதவிகிதத்துக்கும் மேலான பங்குகளை அந்நிய நிறுவனங்கள் வைத்திருக்க முடியாது. ஏர் இந்தியாவை மதிப்பிடும்போது அதற்கு உள்ள கோடிக்கணக்கான கடன்களை மட்டும் பார்க்கக் கூடாது. சர்வதேச அளவில் 30 விமான நிலையங்களில் ஏர் இந்தியா சேவை வழங்குவதற்கான உரிமையைப் பெற்றுள்ளதோடு, திறன் வாய்ந்த ஊழியர் வளத்தையும் கொண்டுள்ளது. ஏர் இந்தியாவுக்கு அதிகக் கடன் இருந்தாலும், அந்நிறுவனத்தைச் சிறப்பாகக் கையாளவில்லை என்றே கூறவேண்டும். எனவே சிறப்பாகக் கையாளும் திறன் கொண்ட உள்நாட்டுத் தனியார் நிறுவனத்திடம் ஏர் இந்தியாவின் பங்குகள் செல்ல வேண்டும்” என்றார்.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon