மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 9 ஜூலை 2020

கர்நாடக தேர்தல்: அதிமுக?

கர்நாடக தேர்தல்: அதிமுக?

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவோம் என டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறியிருந்த நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இணைந்து வெளியிட்டுள்ள அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 12ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. மே 15ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன. 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று(ஏப்ரல் 17) தொடங்கியது. முன்னதாக, பாஜக 72 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முதல் கட்டமாக வெளியிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று (ஏப்ரல்16) 2ம் கட்டமாக 82 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டது. அதேபோல் காங்கிரஸ் சார்பில் 218 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், காந்தி நகர், கோலார் தங்கவயல் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுவைத் தாக்கல் செய்யலாம் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. போட்டியிட விரும்பும் அதிமுக உறுப்பினர்கள் தலைமைக் கழகத்தில் ஏப்ரல் 18, 19 ஆகிய தேதிகளில் விருப்ப மனுக்களை வழங்கலாம் எனக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து கர்நாடக மாநில அதிமுக செயலாளராக எம்.பி.யுவராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பெங்களூரு மாவட்ட முன்னாள் செயலாளர் ஆவார். இதேபோல் கர்நாடக மாநில இணைச் செயலாளர் பொறுப்பில் பெங்களூரு மாவட்ட முன்னாள் செயலாளர் எஸ்.டி.குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி கர்நாடக அதிமுக நிர்வாகிகள் கூட்டம் அவைத் தலைவர் சம்பத் தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் செயலாளரும், டிடிவி தினகரன் ஆதரவாளருமான‌ புகழேந்தி, பொருளாளர் ராஜேந்திரன் உட்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் புகழேந்தி பேசுகையில், “கர்நாடக அதிமுகவை பொறுத்தவரைத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் முறையாகத் தேர்தல் நடத்தப்பட்டுத் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் நாங்கள். எங்களை அதிமுக பொதுச்செயலாளரால் மட்டுமே நீக்க முடியும். பொதுச்செயலாளர் மறைந்துவிட்டதால் எங்களை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.

குறிப்பாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என புதிய பொறுப்புகளை உரு வாக்கியுள்ள பழனிசாமி, ஓ.பன் னீர் செல்வம் ஆகியோருக்கு அதிகாரம் இல்லை. கட்சியின் விதிகளை மீறி, புதிய பொறுப்புகளை உருவாக்கிய பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். வழக்கமாகப் போட்டியிடும் இரட்டை இலை சின்னத்திலே போட்டியிடுவார்கள்” என்று தெரிவித்திருந்தார்.

இரட்டை இலை சின்னத்தை மதுசூதனன் தலைமையிலான அணிக்கு வழங்குவதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், புகழேந்தியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தற்போது, அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்களை வழங்கலாம் என அதிமுக வெளியிட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon