மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 17 செப் 2019

சென்னையில் சிறப்பு பாஸ்போர்ட் முகாம்!

சென்னையில் சிறப்பு பாஸ்போர்ட் முகாம்!

சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 21) அன்று சிறப்பு பாஸ்போர்ட் முகாம் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "பொதுமக்களின் தேவையை நிறைவேற்றவும், அடிக்கடி பயணம் மேற்கொள்வோர் கால நீடிப்பு செய்ய விண்ணப்பங்கள் அளிக்கவும் வரும் ஏப்ரல் 21ஆம் தேதியன்று சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இந்த சிறப்பு முகாம்கள் சென்னையில் உள்ள சாலிகிராமம், தாம்பரம், அமைந்தகரை ஆகிய இடங்களில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்களில் நடைபெறும். விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தின் அடிப்படையில் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். இந்த முகாமின் மூலம் சுமார் 2,050 விண்ணப்பதாரர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பாஸ்போர்ட் மேளாவில் பங்கு பெற அனைத்து விண்ணப்பதாரர்களும் www.passportindia.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் பதிவு செய்து ஏ.ஆர்.என். (விண்ணப்பப் பதிவு எண்-ARN) உருவாக்கி இணையதளத்தின் மூலம் உரிய கட்டணத்தைச் செலுத்தி பின்னர் சந்திப்பிற்கான நேரத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் சேவை மையங்களுக்கு வரும் போது சந்திப்பு நேர விவரங்களுடன் கூடிய ஏ.ஆர்.என்.-ஐ விவரங்கள் அச்சிட்ட பிரதியை எடுத்து வர வேண்டும். மேலும் தேவையான ஆவணங்களின் மூலங்களையும் சுயசான்று அளிக்கப்பட்ட இரண்டு நகல்களையும் கொண்டு வர வேண்டும்.

புதிய மற்றும் வெளியீட்டுக்கான விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். தட்கல் மற்றும் காவல்துறை தடையின்மைச் சான்றிதழ் (பி.சி.சி.) விண்ணப்பங்கள் இந்த முகாமின்போது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

இந்த சிறப்பு முகாமிற்கான சந்திப்பு நேர விவரங்கள் வரும் புதன்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு வெளியிடப்படும். முகாம் நாளன்று அவரவருக்கு ஒதுக்கப்பட்ட நேர அடிப்படையில் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும். நேர்காணலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, நிராகரிக்கப்பட்டுள்ள டோக்கன்கள் இந்த முகாமின்போது பரிசீலிக்கப்படமாட்டாது" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon