மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஏப் 2020

சல்மான் வெளிநாடு செல்ல அனுமதி!

சல்மான் வெளிநாடு செல்ல அனுமதி!

மானை வேட்டையாடிய வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ள சல்மான் கான் வெளிநாடு செல்ல ஜோத்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

'ஹம் சாத் ஹெய்ன் ஹெய்ன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக ஜோத்பூர் சென்றபோது அரிய வகை மானான 'கலைமானை' வேட்டையாடியதாக சல்மான் கான் மீது 1998ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் சல்மான் கானுடன் சேர்த்து நடிகர் சயிஃப் அலி கான் மற்றும் நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு மற்றும் நீலம் ஆகியோருடைய பெயர்களும் இருந்தன.

20 ஆண்டுகள் நடந்த இந்த வழக்கில் ஜோத்பூர் கீழ் நீதிமன்றம் சல்மான் கானை குற்றவாளி என்று தீர்ப்பளித்து மற்ற நால்வரையும் விடுவித்துள்ளது. சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் இரண்டு நாட்கள் சிறையில் இருந்த சல்மான் கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்த நிலையில், நான்கு வெளிநாடுகளுக்குச் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் எனக் கோரி ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடிகர் சல்மான் கான் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஜோத்பூர் நீதிமன்றம், சல்மான் கான் வெளிநாடு செல்ல அனுமதி அளித்துள்ளது. நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதையடுத்து, வரும் மே 25ஆம் தேதி முதல் ஜூலை 10ஆம் தேதி வரை அமெரிக்கா, நேபாளம், கனடா ஆகிய நாடுகளுக்கு சல்மான் கான் செல்ல உள்ளார்.

தற்போது இயக்குநர் அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கத்தில் உருவாகும் சல்மான் கானின் புதிய படமான பாரத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இதில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிக்கவுள்ளார்.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon