மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 21 செப் 2020

லாலு கட்சிக்குத் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

லாலு கட்சிக்குத் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தலைவராக இருந்துவரும் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சி, கடந்த 2014-15ஆம் நிதியாண்டுக்கான தணிக்கை விவரங்களை அளிக்காமல் தாமதம் செய்துவருவதற்கான காரணத்தை அளிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனைச் செய்யாவிட்டால், கட்சியின் அங்கீகாரம் சஸ்பெண்ட் செய்யப்படும் அல்லது முழுதாகத் திரும்பப் பெறப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

1991-96 காலகட்டத்தில் நடந்த கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 4 வழக்குகளில், பிகார் மாநில முன்னாள் முதலமைச்சரும் ஆர்ஜேடி கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு தண்டனை வழங்கியுள்ளது ராஞ்சி சிபிஐ நீதிமன்றம். இது தவிர, அவரது குடும்பத்தினருக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக, அமலாக்கத் துறையும் கடும் குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்துள்ளது. இந்த நிலையில், ஆர்ஜேடிக்கு மேலும் நெருக்கடியளிக்கும் விதத்தில் புதிய விவகாரமொன்று வெளியாகியுள்ளது.

கடந்த 2014-15ஆம் நிதியாண்டுக்கான தணிக்கைத் தகவல்களை, இதுவரை ஆர்ஜேடி தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கவில்லை. 2015ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதிக்குள், அக்கட்சி இதனைச் சமர்ப்பித்திருக்க வேண்டும். இதனையடுத்து, இதுகுறித்து நினைவூட்டும் வகையில் பலமுறை தேர்தல் ஆணையம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, ஆர்ஜேடியிடமிருந்து பதிலேதும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஏப்ரல் 13ஆம் தேதியன்று ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சிக்குத் தேர்தல் ஆணையம் ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில், இதுநாள் வரை தணிக்கை விவரங்களை அளிக்காமல் இருந்ததற்கான காரணத்தை எழுத்துபூர்வமான விளக்கமாக அளிக்க வேண்டுமெனக் கூறியுள்ளது. 1968ஆம் ஆண்டு தேர்தல் சின்னம் ஒதுக்கீடு ஆணையின் 16ஏ பத்தியின்படி, ஆணையத்தின் வழிமுறைகளைப் பின்பற்றத் தவறும்போது, அது தொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அந்த நோட்டீஸில் கேட்கப்பட்டுள்ளது.

20 நாட்களுக்குள் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி விளக்கமளிக்க வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ”கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் இதனைச் செய்யத் தவறினால், பத்தி 16ஏயின் படி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு உங்களது கட்சியே பொறுப்பாகும்” என்று கூறியுள்ளது தேர்தல் ஆணையம்.

மேற்கூறிய ஆணையின்படி, மாதிரி நடத்தை விதிகளைப் பின்பற்றவோ அல்லது ஆணையத்தின் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மற்றும் வழிமுறைகளைப் பின்பற்றவோ தவறும்போது, ஒரு கட்சியின் அங்கீகாரத்தை சஸ்பெண்ட் செய்யவோ அல்லது முழுதாகத் திரும்பப் பெறவோ தேர்தல் ஆணையத்தினால் முடியும்.

தற்போது சிறையில் இருந்துவரும் லாலுவின் ஜாமீன் தொடர்பான வழக்கு, வரும் 20ஆம் தேதி விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்னதாகவே, இந்த விவகாரம் குறித்து அவர் கருத்து வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon