மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 7 ஏப் 2020

தடைக் காலம்: மீனவர்களுக்கு அதிக இழப்பீடு?

தடைக் காலம்: மீனவர்களுக்கு அதிக இழப்பீடு?

மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.500 வீதம் 61 நாட்களுக்கும் நிவாரணம் வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2017- 18ஆம் ஆண்டு முதல் மீன்பிடி தடைக் காலத்தை 45 நாட்களிலிருந்து 61 நாட்களாக அதிகரித்தும்; தடைக் காலத்தில் மீனவர்களுக்கான நிவாரண தொகையை 2000 ரூபாயிலிருந்து 5000 ரூபாயாக அதிகரித்தும் தமிழக அரசு கொள்கை முடிவை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி, நாளொன்றுக்கு 82 ரூபாய் மீனவர்களுக்கு நிவாரணமாக வழங்கப்படுகிறது. இந்தத் தொகையை வைத்து குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது என்பதால் ஒரு நாளைக்கு 500 ரூபாய் நிவாரணமாக வழங்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என மீனவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதில், "ஒவ்வொரு மீன் இனமும் வெவ்வேறு காலகட்டத்தில் இனப்பெருக்கம் செய்கின்றன. மீன்பிடி தடைக் காலத்தில் மீன் வளம் அதிகரிக்கும் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. இந்த தடைக் காலத்தில் அன்னியச் செலாவணி இழப்பும் ஏற்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், மீனவர்களின் முதலீடுகளும் பாதிக்கப்படுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon