மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 28 ஜன 2021

முன்னாள் அதிகாரிகள் பிரதமருக்குக் கடிதம்!

முன்னாள் அதிகாரிகள் பிரதமருக்குக் கடிதம்!வெற்றிநடை போடும் தமிழகம்

உத்தரப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் சமீபத்தில் நடந்த பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து, 49 முன்னாள் அரசுத் துறை உயர் அதிகாரிகள் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளனர். இந்தியாவின் தற்போதைய நிலையைக் கண்டு வேதனையுறுவதாக, அதில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்திலுள்ள உன்னாவ் மாவட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் குல்தீப்சிங் செங்கர் மற்றும் அவரது சகோதரரால் பாலியல் அத்துமீறலுக்கு ஆளானதாகப் புகார் தெரிவித்தார் பதினைந்து வயது சிறுமி ஒருவர். இது தொடர்பான மோதலில் அந்தச் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு, அவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். இந்த விவகாரம் தேசிய அளவில் சர்ச்சையாகியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஜம்மு காஷ்மீரிலுள்ள கத்துவா மாவட்டத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக, சமீபத்தில் போலீஸ் அதிகாரிகள் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, கடந்த 14ஆம் தேதியன்று விளக்கமளித்த பிரதமர் நரேந்திர மோடி “குற்றவாளிகள் விரைவில் தண்டனை பெறுவார்கள்’ என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 15) ஓய்வுபெற்ற முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகள் 49 பேர் ஒன்றிணைந்து பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர். அதில், நாம் அனைவரும் இருண்ட காலத்தில் வாழ்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

“சொல்லவொண்ணா கொடுமைகளான கத்துவா மற்றும் உன்னாவ் சம்பவங்கள், அரசாங்கம் தோல்வியுற்றதையே உணர்த்துகிறது. இந்தக் கடிதத்தின் மூலமாக எங்களது ஒட்டுமொத்த வேதனையையும் வெட்கத்தையும் மட்டும் வெளிப்படுத்தவில்லை; எங்களது மனக்குமுறல்களையும் வெளிப்படுத்துகிறோம். இந்த இரண்டு வழக்குகளிலும், சம்பந்தப்பட்ட மாநிலங்களில் உங்களது கட்சியே ஆட்சியில் உள்ளது.

உங்களுக்கும் உங்களது கட்சித்தலைவருக்கும் கட்சியினுள் இருக்கும் அதிகாரத்தினால், நீங்களே இந்த நிகழ்வுகளுக்குப் பொறுப்பு என்றாகிறது. நேற்று வரை இதுகுறித்து எதுவும் பேசாமல் மவுனித்திருந்த நீங்கள், இந்தியா மற்றும் சர்வதேச அளவில் எதிர்க்குரல் எழுந்ததால், அதைப் புறந்தள்ள முடியாமல் அதுகுறித்து பேசியிருக்கிறீர்கள்” என்று இதில் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கத்துவா வழக்கில் விரைவில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்றும், உன்னாவ் வழக்கு சிறப்புப் புலனாய்வுக் குழுவினரால் விசாரிக்கப்பட வேண்டுமென்றும், அவர்கள் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுபோன்ற குற்றங்களினால் பாதிக்கப்படுபவர்களை மனதில் கொண்டு முஸ்லிம்கள், தலித் மற்றும் பிற சிறுபான்மையின மக்கள், பெண்கள், குழந்தைகள் வாழ்க்கை குறித்த பயம் மற்றும் சுதந்திரம் குறித்த மிரட்டல் எதுவுமில்லாமல் வாழ சம்பந்தப்பட்ட அரசு வழிவகை செய்ய வேண்டுமென்று தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தை ஆதரித்துப் பேசுபவர்களை அரசில் இருந்து நீக்க வேண்டுமென்றும், விரைவில் இதுகுறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவாதிக்க வேண்டுமெனவும், பிரதமருக்கு அந்த அதிகாரிகள் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon