மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 23 அக் 2019

பேராசிரியை விவகாரம்: ஆளுநர் உத்தரவில் குழப்பம்!

பேராசிரியை விவகாரம்: ஆளுநர் உத்தரவில் குழப்பம்!

மாணவிகளைப் பாலியல் தொழிலுக்குப் பேராசிரியை நிர்மலா தேவி கட்டாயப்படுத்திய சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, உயர் பொறுப்பில் உள்ளவர்களிடம் மாணவிகள் அட்ஜெஸ்ட் செய்துகொண்டால், 85 சதவீத மதிப்பெண்களும், பணமும் தருவதாகக் கூறி நிர்பந்தப்படுத்தியது தொடர்பான ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேராசிரியை நிர்மலா நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.சந்தானம் உயர்மட்ட விசாரணை மேற்கொள்வார் என ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

பேராசிரியை தனது பேச்சினிடையே மிக மிக உயர் பதவியில் இருப்பவர் என்று கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவரைத் திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இது குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார். சுதந்திரப் போராட்டத் தியாகி தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டுச் சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 17) மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருப்பவர்தான் அங்குள்ள கல்வியாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளைத் தீர்க்கும் தலைவராக விளங்கிக்கொண்டிருப்பவர். துணைவேந்தர்தான் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், வேந்தராக உள்ள ஆளுநர் எப்படி அதற்கான முயற்சியில் ஈடுபட்டார் என்பது புரியவில்லை. ஏதோ ஒரு குழப்பம் இருப்பதாகவே தெரிகிறது. எனவே, உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிவரும்” என்று தெரிவித்தார்.

ஆளுநருக்கு அதிகாரம் இல்லை

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஏப்ரல் 17) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களை நிர்வகிக்கும் பதவியில் உள்ளவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளுக்குப் பாலியல் வலை வீசிய அக்கல்லூரியின் உதவிப் பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டிருக்கிறார். இது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றாலும்கூட, இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவது கண்டிக்கத்தக்கது.

நிர்மலா தேவியைக் கைதுசெய்துள்ள காவல் துறையினர், இதை மாணவிகளுக்கும், நிர்மலா தேவிக்கும் இடையிலான பிரச்சினையாக மட்டும் கருதி, அத்துடன் இந்த வழக்கை முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

மற்றொருபுறம், இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்த ஓய்வு பெற்ற அதிகாரி சந்தானம் தலைமையிலான விசாரணைக் குழுவை ஆளுநர் பன்வரிலால் புரோகித்தும், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் சார்பில் 5 பேர் கொண்ட விசாரணைக் குழுவைத் துணைவேந்தர் செல்லத்துரையும் அறிவித்துள்ளனர். இவையும் பாலியல் ஊழலை மூடி மறைக்கும் முயற்சிதான்.

மாணவிகளுக்குப் பாலியல் வலை வீசப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப் பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் ஆளுநர் புரோகித்துக்கோ, துணைவேந்தர் என்ற முறையில் செல்லத் துரைக்கோ எந்த அதிகாரமும் கிடையாது. ஆளுநர் புரோகித் பல்கலைக்கழகங்களுக்கு மட்டும்தான் வேந்தர் ஆவார். கல்லூரிகளை நிர்வகிக்கும் அதிகாரமோ, அங்கு நடக்கும் தவறுகள் குறித்து விசாரிக்கும் அதிகாரமோ வேந்தருக்கு இல்லை.

அது மட்டுமின்றி, பல்கலைக்கழகத்தின் உயர் பதவிகளில் இருப்பவர்களின் சார்பில்தான் கல்லூரி மாணவிகளுக்கு உதவிப் பேராசிரியை பாலியல் வலை வீசினார் என்று குற்றம்சாட்டப்படும் நிலையில், சந்தேகத்தின் நிழல் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை மீதும் விழுந்துள்ள சூழலில், அவர் எந்த அடிப்படையில் விசாரணைக்கு ஆணையிட முடியும்? அவர் விசாரணையை எதிர்கொள்ள முடியுமே தவிர, விசாரணைக்கு ஆணையிட முடியாது.

இந்த வி‌ஷயத்தில் தலையிட்டு விசாரணைக்கு ஆணையிட ஆளுநருக்கும் அதிகாரமில்லை. ஒருவேளை, இந்த விவகாரத்தில் பல்கலைக்கழக நிர்வாகிகளுக்குத் தொடர்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் ஆணையை மட்டுமே ஆளுநர் பிறப்பிக்க முடியும்; விசாரணைக்கு ஆணையிட முடியாது.

இதற்கெல்லாம் மேலாகப் பல்கலைக்கழக நிர்வாகிகளின் தூண்டுதலில்தான் கல்லூரி மாணவிகளைத் தவறான பாதையில் வழி நடத்த நிர்மலா தேவி முயன்றார் என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புத்தாக்கப் பயிற்சிக்கு உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி அழைக்கப்பட்டிருக்கிறார். ஆனால், பயிற்சி வகுப்பில் அவர் பங்கேற்கவில்லை. மாறாகப் பல்கலைக்கழகத்தில் குளிரூட்டி வசதி கொண்ட அறை அவருக்காக ஒதுக்கித் தரப்பட்டிருக்கிறது.

பல்கலைக்கழகத்தின் அதிகார வரிசையில் உதவிப் பேராசிரியர் என்பவர், அதிலும் குறிப்பாக தனியார் கல்லூரியின் உதவிப் பேராசிரியருக்குப் பல்கலைக்கழகத்தில் எந்த மரியாதையும் இருக்காது. ஆனாலும், நிர்மலா தேவிக்காகக் குளிரூட்டப்பட்ட அறையைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழிகள் ஆய்வுத் துறைத் தலைவராகவும், பல்கலைக்கழக மானியக் குழுவின் மனிதவள மேம்பாட்டு மைய இயக்குநருமான வி. கலைச்செல்வன் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்.

அவர் அங்கு 10 நாட்களுக்கும் மேலாகத் தங்கி, தனது சொந்த வேலைகளைக் கவனித்திருக்கிறார். அது மட்டுமின்றி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தைப் பயன்படுத்தி மாணவிகளுக்குப் பல்வேறு சலுகைகளைச் செய்து கொடுப்பதாக நிர்மலா தேவி அவரது தொலைபேசி உரையாடலில் குறிப்பிட்டிருப்பதால் பல்கலைக்கழகத்தின் உயர்நிலை நிர்வாகிகளுக்கு இதில் நிச்சயம் தொடர்பு இருக்க வேண்டும். இதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, பல்கலைக்கழகம் தனி விசாரணை நடத்துவது தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்வது ஆகும்” என்று ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon