மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 31 மா 2020

மசூதியில் குண்டு வைத்தது யார்?

மசூதியில் குண்டு வைத்தது யார்?

மெக்கா மசூதி குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 5 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் குண்டுவெடிப்புக்கு யார்தான் பொறுப்பு என்று பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஹைதராபாத்தில் மெக்கா மசூதியில் 2007ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர். 58 பேர் படுகாயமடைந்தனர். அப்போது வெடிக்காத 2 சக்திவாய்ந்த வெடிகுண்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் மசூதிக்கு வெளியே போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக சாமியார் அசீமானந்தா, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ்ஸின் முன்னாள் நிர்வாகிகளான சுனில் ஜோஷி, சந்தீப் டாங்கே, ஆர்எஸ்எஸ் தொண்டர் ராமச்சந்திர கல்சங்க்ரா, தேஜ்ராம் பார்மர், அமித் சவுகான் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களிடம் விசாரணை நடத்தியது சிறப்பு விசாரணைக் குழு. பின்னர் அதில் 26 பேர் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாகச் சந்தேகித்தது. எனினும் குற்றத்தை நிரூபிக்கப் போதிய ஆதாரம் இல்லாததால் அவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

எனினும் இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்துப் போராட்டங்கள் வெடித்த நிலையில், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. பின்னர் சிபிஐ 68 சாட்சிகளின் ஆதாரங்களைச் சமர்ப்பித்தது. எனினும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) 2011ஆம் ஆண்டு வழக்கு மாற்றப்பட்டது.

என்ஐஏ விசாரணையின்போது மொத்தம் 226 சாட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு 411 ஆவணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. எனினும் வழக்கில் போதிய ஆதாரம் இல்லாததாகக் கூறி நேற்று சாமியார் அசீமானந்தா உட்பட 5 பேரை விடுவித்து தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவீந்திர ரெட்டி தீர்ப்பு வழங்கினார். தொடர்ந்து நேற்றே அவர் தனது பதவியையும் மர்மமான முறையில் ராஜினாமா செய்தார்.

இவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க ஹைதராபாத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது யார் என்று கேள்வி எழுப்பியதுடன் தங்களுக்கு நீதி வேண்டும் என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

2007ஆம் ஆண்டு மசூதிக்கு வெளியே போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சலீம் என்பவரின் சகோதரி ரெஹானா பேகம், ”குண்டுவெடிப்பைத் திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளனர். தற்போது குற்றவாளிகள் அனைவரையும் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. அப்படியானால் உண்மையான குற்றவாளிகள் யார்? எங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்து தவித்துவருகிறோம். எங்களுக்கு நீதி வேண்டும்” என்று கூறியுள்ளார்.

குண்டுவெடிப்பில் உயிரிழந்த ஷேக் நயிமீன் என்பவரின் உறவினர் முஹமத் சலீம், “நாங்கள் நினைத்ததற்கு நேர்மாறாகத் தீர்ப்பு வந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட இஸ்லாமிய இளைஞர்களுள் ஒருவரான சயத் இம்ரான், “குண்டுவெடிப்பில் ஈடுபட்டதாகக் கூறி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். அப்போது நானும் கைது செய்யப்பட்டேன். கைது செய்யப்பட்டு பின்பு 2008இல் வெளியே வந்த பிறகு மீண்டும் பொறியியல் படிப்பைத் தொடர்ந்தேன். தற்போது 33 வயதாகும் நான் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்துவருகிறேன். 18 மாதங்கள் சிறையில் இருந்ததால் எனக்கு யாரும் வேலை கொடுக்கவில்லை. பல்வேறு சிரமங்களுக்கிடையே பணியில் சேர்ந்தேன். செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவித்தேன். தற்போது 5 பேரை விடுவித்துத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு விசாரணை அமைப்பினர் பதில் கூற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon