மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 31 மா 2020

ஜெயலலிதாவைப் பார்க்கவில்லை: பன்னீர்செல்வம்

ஜெயலலிதாவைப் பார்க்கவில்லை: பன்னீர்செல்வம்

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் பார்க்கவில்லை என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்.

ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிமுக பிரிந்து சசிகலா - பன்னீர்செல்வம் என இரு அணிகளாகச் செயல்பட ஆரம்பித்தது. அப்போது பேசிய பன்னீர்செல்வம், "நாங்கள் யாரும் மருத்துவமனையில் ஜெயலலிதாவைப் பார்க்கவில்லை" என்று கூறி ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

அணிகள் இணைவதற்குப் பன்னீர்செல்வம் வைத்த நிபந்தனையை ஏற்று ஜெயலலிதா மரணத்திற்கு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணையும் நடந்துவருகிறது. அண்மையில் விசாரணை ஆணையத்தில் ஆஜராகிய பின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அதில் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர்" என்று கூறியிருந்தார்.

இதற்கு நேற்று (ஏப்ரல் 16) மறுப்பு தெரிவித்துள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், "நான் திரும்பத் திரும்பக் கூறுகிறேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த நேரத்தில் நான் அவரைப் பார்க்கவே இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், ராமமோகன ராவின் கருத்து உண்மைக்குப் புறம்பானது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் சந்திப்பில் காவிரி விவகாரம் குறித்தும் பேசிய பன்னீர்செல்வம், "காவிரி மேலாண்மை வாரியமும் காவிரி முறைப்படுத்தும் குழுவையும் அமைப்பதற்கான ஸ்கீம் திட்டத்தை எங்களிடம் தெரியப்படுத்துங்கள் என்று உச்ச நீதிமன்றம் எங்களிடம் கேட்டுள்ளது. இவற்றையெல்லாம் ஒரு பொறுப்பான அரசாக நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். ஆனால் அரசியல் லாபத்திற்காக எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம், போராட்டங்களை அறிவிப்பது தேவையில்லாதது. இதனை மக்கள் வெறுக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon