மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 31 மா 2020

ஸ்ரீலீக்ஸ்: பாலியல் வன்கொடுமையின் உச்சகட்டம்!

ஸ்ரீலீக்ஸ்: பாலியல் வன்கொடுமையின் உச்சகட்டம்!

நடிகை ஸ்ரீரெட்டியின் பரபரப்புக் குற்றச்சாட்டுகளுக்குத் தெலுங்கு திரையுலகம் ரியாக்ட் செய்யத் தொடங்கியிருக்கிறது. அவருக்கு ஆதரவாக ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷன் ஆர்ப்பாட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தனது பங்குக்கு ஸ்ரீரெட்டிக்கு அறிவுரை சொல்லியிருக்கிறார்.

“எந்த நடிகையாவது பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டால் அவர்கள் கண்டிப்பாக நீதிமன்றத்தை அணுகி, சட்டப்படி வழக்கு பதிவுசெய்து குற்றவாளிகளுக்கு எதிராகப் போராட வேண்டும். அதை விடுத்து, தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குச் சென்று அங்கு பாதிக்கப்பட்ட அனுபவத்தைப் பகிர்வதன் மூலம் எந்த உபயோகமும் இல்லை. இதைப் பரபரப்பான ஒன்றாக மாற்றாமல், போலீஸ் மற்றும் நீதிமன்றம் மூலம் தீர்வு தேடலாம்” என்று கூறியிருக்கிறார்.

ஸ்ரீரெட்டி எவ்வளவோ ஆதாரங்களைக் காட்டினாலும் இதுவரையில் நீதிமன்றத்தை அணுகவில்லை. இதற்குக் காரணமாக அவர் சொல்வது ‘என்னை சீரழித்தவர்கள் பெரிய இடத்துப் பிள்ளைகள். எனவே நீதிமன்றத்தில் எனக்கு நீதி கிடைக்காது’ என்பதே. எனவே, தெலுங்குத் திரையுலகம் மற்றும் மக்களின் முழு ஆதரவையும் பெற்ற பின் நீதிமன்றத்தை அணுகுவது சரியாக இருக்கும் என நினைப்பதாகத் தெரிகிறது. அவரது எண்ணம் கிட்டத்தட்ட உண்மையாகிவருகிறது.

ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நடிகை சந்தியா நாயுடு பேசியது ஆந்திரா, தெலங்கானா ஆகிய பகுதிகளில் மிகப்பெரிய அதிர்வை உருவாக்கியிருக்கிறது. “பொதுவாகவே நான் அம்மா அல்லது அத்தை கேரக்டரில்தான் நடித்துவருகிறேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னை அம்மா என்று அழைப்பவர்கள், ஷூட்டிங்கில் அத்தை என்று அழைப்பவர்களும் இரவானால் என்னுடன் வா என அழைப்பார்கள். அந்தளவுக்கு தெலுங்கு சினிமா துறை மோசமான நிலையில் இருக்கிறது” என்று அவர் கண்ணீர் மல்கப் பேசியது அசையாதவர்களையும் அசைய வைத்திருக்கிறது.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon