மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 31 மா 2020

ஹைதராபாத்தில் நவீன ராமானுஜர்: ஃபாலோ அப்!

ஹைதராபாத்தில் நவீன ராமானுஜர்: ஃபாலோ அப்!

தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தில், ஜியாகுடா பகுதியில் இருக்கும் ரங்கநாதப் பெருமாள் கோயிலில் அறுபது வயதான வேத அறிஞர் ரங்கராஜன், தலித் ஒருவரைத் தோளில் தூக்கிச் செல்லும் விழாவைப் புதுப்பிக்கிறார் என்ற ஓரு செய்தியை ஏப்ரல் 15 மின்னம்பலம் இதழின் காலைப் பதிப்பில் வெளியிட்டிருந்தோம்.

ஹைதராபாத்தில் நவீன ராமானுஜர் என்ற தலைப்பில் வெளியான செய்தியின்படியே நேற்று (ஏப்ரல் 16) மாலை அந்த நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார் தெலங்கானா மாநில திருக்கோயில்கள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவரான ரங்கராஜன்.

சாதி பார்த்தால் வைணவம் இல்லை, வைணவம் பார்த்தால் சாதி இல்லை என்று ராமானுஜர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அரங்கேற்றிய கொள்கை தீபத்தை ஏந்திக்கொண்டு, தன் தோள்களில் ஆதித்ய பராஸ்ரி என்ற தலித் பக்தரை தூக்கிக்கொண்டு கோயிலுக்குச் செல்கிறார் ரங்கராஜன். தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் ஜியகூடா பகுதியில் இருக்கும் ரங்கநாத சுவாமி திருக்கோயிலில்தான் இந்த நிகழ்வு நேற்று நடந்திருக்கிறது.

நேற்று மாலை 4.30 மணியளவில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடந்தன. ‘ப்ரம்மம் ஒக்கடே பரப்ரம்மம் ஒக்கடே’ (கடவுள் ஒன்றே கடவுள் ஒன்றே) என்ற புகழ்பெற்ற அன்னமாச்சாரியாரின் பாடல்கள் முழங்க, நாதஸ்வர மேள தாளங்கள் ஒலிக்க, இன்னொரு பக்கம் வேதங்களும் ஓதப்பட்டன. பொதுமக்கள் பலரும் கூடியிருக்க உள்ளூரைச் சேர்ந்த தலித் இளைஞர் ஆதித்ய பராஸ்ரி என்பவரை கோயிலுக்கு சற்றுத் தொலைவில் இருந்து தன் தோள்களில் தூக்கிக்கொண்டார் தலைமை அர்ச்சகர் ரங்கராஜன்.

திருவிழா போன்ற கொண்டாட்டத்துக்கிடையே, 25 வயதான தலித் இளைஞருக்குப் பரிவட்டம் கட்டப்பட்டு மாலைகள் சூட்டப்பட்டிருந்தன. அவரைத் தோள்களில் தூக்கிக்கொண்டு கோயிலுக்குள் இருக்கும் த்வ்ஜஸ்தம்பம் (கொடிக்கம்பம்) வரை சென்றார் ரங்கராஜன். அதன் பின் ஆதித்யாவைக் கோயிலுக்குள் அழைத்துச் சென்று சிறப்பு பூஜைகள் நடத்தி, பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

இதுபற்றி ரங்கராஜன் சொல்லும்போது, “கடந்த ஜன்வரி மாதம் ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு வட்ட மேஜை விவாதத்தில் நான் கலந்துகொண்டேன், அப்போது ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கோயில்களில் இன்னும் முழு மரியாதை கிடைக்கப் பெறாதது பற்றி விவாதங்கள் எழுந்தன. அதை ஒட்டியே இதுபோன்ற நிகழ்ச்சி நடத்த முடிவெடுத்தேன். கடவுள் முன் அனைவரும் சமம் என்பதைச் சொல்ல இதுபோன்ற பல நிகழ்வுகள் நடக்க வேண்டும்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது பற்றி ஆதித்யாவிடம் கேட்டபோது, “தீண்டாமைக் கொடுமைகளும், பிரிவினைகளும் தலைவிரித்தாடிக்கொண்டிருக்கும் நிலையில் நான் இன்று கௌரவப்படுத்தப்பட்டிருக்கிறேன். இதை ஆரம்பமாக வைத்துப் பிரிவினைகள் அகற்றப்பட வேண்டும். என் சொந்த ஊரில் என் குடும்பம் அனுமார் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் இப்போது என்னைத் தோளில் தூக்கிக்கொண்டு கோயிலுக்குள் செல்கிறார்கள், மகிழ்ச்சி’’ என்றார்.

தெலங்கானா அரசின் முழு ஒத்துழைப்போடு நடந்த இந்த நிகழ்வில் தெலங்கானா அரசின் சிறப்புப் பிரதிநிதியாக வேணுகோபாலாச்சாரி கலந்துகொண்டார்.

எதிர்மறைகள் மட்டுமே வைரல் ஆகும் இந்த சமூகத்தில் நேர்மறைச் சிந்தனைகளும் ஆக்கபூர்வமான செயல்பாடுகளும் வைரல் ஆக வேண்டும்.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon