மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 3 ஏப் 2020

அச்சம் ஏற்பட்டுள்ளது: தினகரன்

அச்சம் ஏற்பட்டுள்ளது: தினகரன்

காவிரி விவகாரத்தில் பாஜகவின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, கர்நாடகா தேர்தல் மட்டுமல்ல நாடாளுமன்றத் தேர்தல் வரையிலும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று மாலை கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் டிடிவி தினகரன் விமானம் மூலம் மதுரை சென்றடைந்தார்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் இன்று (ஏப்ரல் 17) செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காவிரி விவகாரத்தில் கர்நாடகாவை பாதிக்காத வகையில் பாஜக செயல்படும் என முரளிதர ராவ் கூறியுள்ளார். இதைப் பார்க்கும்போது மே 3ஆம் தேதிக்குள் மட்டுமல்ல, மே 12ஆம் தேதி நடக்க இருக்கும் கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிந்த பின்னும் 2019ஆம் ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் வரையிலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.

பின்னர், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதால் அதனை நிரந்தரமாக மூட வேண்டும். விரிவாக்கம் கூடாது என்பதுதான் மக்களின் கோரிக்கை” என்று தெரிவித்தார்.

முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவ் விசாரணை ஆணையத்தில் எதையாவது சொல்லிவிடுவாரோ என்று அமைச்சர்கள் பயப்படுகிறார்கள் என்று குறிப்பிட்ட தினகரன், “பெரிய அரசியல் தலைவரின் மரணத்தை வேண்டுமென்றே அரசியல் ஆக்குவதற்காக திமுக உட்பட இன்று ஆட்சியில் இருப்பவர்கள் வரை தவறாக முயற்சித்துவந்தார்கள் என்பது விசாரணையில் தெரியவரும். மாணவிகளைப் பாலியல் தொழிலுக்குப் பேராசிரியை கட்டாயப்படுத்திய விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடைபெற்றால் மட்டுமே உண்மை நிலை தெரியவரும்” என்றும் கூறினார். பின்னர் தூத்துக்குடிக்குப் புறப்பட்டு சென்றார்.

வைகோ வாகனப் பிரசாரம்

இதற்கிடையே, ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தூத்துக்குடி மாவட்டத்தில் 4 நாட்கள் வாகனப் பிரசாரம் மேற்கொள்கிறார். இன்று மாலை 4 மணிக்கு கோவில்பட்டியில் வாகனப் பிரசாரத்தைத் தொடங்குகிறார். தொடர்ந்து எட்டயபுரம், புதூர், சூரங்குடி, வைப்பார், குளத்தூர் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

நாளை கரிசல்குளத்தில் தொடங்கி காமநாயக்கன் பட்டி, பசுவந்தனை, ஒட்டப்பிடாரம், புதியம்புதூர் ஆகிய இடங்களிலும், 21ஆம் தேதி செய்துங்கநல்லூரில் தொடங்கி ஆழ்வார்திருநகரி, நாசரேத், பேய்குளம், சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி, உடன்குடி ஆகிய இடங்களிலும், 22ஆம் தேதி ஸ்ரீவைகுண்டத்தில் தொடங்கி ஏரல், வடக்கு ஆத்தூர், தெற்கு ஆத்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், திருச்செந்தூர், ஆலந்தலை, குலசேகரன்பட்டினம், மணப்பாடு, பெரியதாழை ஆகிய இடங்களிலும் வாகனப் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

28ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே நடைபெறும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon