மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 16 ஜன 2021

கட்டாய இடமாற்றம் நகரத் தீண்டாமையாகும்!

கட்டாய இடமாற்றம் நகரத் தீண்டாமையாகும்!

தமிழக அரசின் சேரிகள் இடமாற்றக் கொள்கை நகரத் தீண்டாமையை வளர்க்கிறது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அரி பரந்தாமன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வாழ்வும் ஒடுக்கப்பட்ட மக்களின் சேரிகள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டுவருகின்றன. காலங்காலமாகத் தாங்கள் வாழ்ந்த மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கி எறியப்படும் மக்கள் உண்மையில் சென்னையை உருவாக்கியவா்கள் என்பது பலருக்கும் தெரியாத உண்மை. அப்படி அகற்றப்படும் மக்கள் மிக தொலைவில் அடிப்படை வசதிகள் இன்றிக் குடியமர்த்தப்படுகின்றனா்.

சமீபத்தில் கண்ணகி நகரில் வாழ்ந்த மக்கள் வேறு பகுதிக்கு வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டனர். இது தொடர்பாக வலுக்கட்டாயமாக வெளியேற்றுதல் மற்றும் போதுமான வசதிகள் இன்றி மறுகுடியமர்த்துதல் என்ற தலைப்பில் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்தறியும் பொது விசாரணை ஒன்று நடைபெற்றது சென்னையில் நடைபெற்ற இந்த விசாரணையில் சேரிகள் அகற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட 105 பேர் வாக்குமூலம் அளித்தனா்.

விசாரணையின் நீதிபதிகளாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் எம்ஜி தேவசகாயம், கிருஸ்துதாஸ் காந்தி முன்னாள் துணை வேந்தா் வசந்தி தேவி மக்கள் சிவில் உரிமைக்கழகத்தைச்சேர்ந்த வி.சரஸ்வதி ஆகியோர் பங்கேற்றனா். இவ்விசாரணை அறிக்கையை வெளியிட்டு நீதிபதி அரி பரந்தாமன் பேசியபோது கூறியதாவது்;

ஏழை மக்கள்தான் அரசினால் குறி வைக்கப்படுகின்றனா். வணிக வளாகங்கள், தனியார் கல்லுாரிகள் அதிக வருமானம் பெறும் மேட்டுக்குடியினரின் பங்களாக்கள் ஆகியவற்றுக்கு எந்த விதப் பிரச்சினையும் ஏற்படுவதில்லை.

சேரி அகற்றுவது என்பது மனித உரிமை மீறலாகும். உதாரணமாக செம்மஞ்சேரியில் அதிகமாகப் பள்ளிகள் இல்லை. அங்கு மக்கள் குடியமர்த்தப்படுவது என்ன நியாயம்?

இனியும் தனித்தனியே பொருளாதார வசதிக்கேற்ப குடியிருப்புகள் அமைப்பது சரியல்ல. அனைத்து தரப்பு மக்களையும் இணைத்துச் சமத்துவபுரத்தைப் போன்று குடியிருப்புகள் அமைக்க வேண்டும். ஒரே இடத்தில் ஏழைகள் நடுத்தர வர்க்க மக்கள் மற்றும் பணக்காரர்கள் ஆகியோர் கலந்து வசிப்பதற்கு ஏற்பக் கலவையான குடியிருப்புகளை அமைக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி பேசினார். இவரைத் தொடர்ந்து பேசிய கிறிஸ்துதாஸ் காந்தி சேரிகள் அகற்றப்பட்டால் மக்களுக்கு சென்னை உயர்நீதிமன்றத்திறகு அருகிலுள்ள பகுதிகள்,ரிசர்வ் வங்கிக்கு அருகிலுள்ள பகுதிகள்,கீரின்வேய்ஸ் சாலை,தியோசபிக்கல் சொசைட்டி, ராஜ்பவனுக்கு அருகில் மற்றும் சென்னை கிறிஸ்துவக் கல்லுாரி ஆகிய இடங்களை மாற்று இடங்களாகத் தேர்வு செய்யலாம் என்று தெரிவித்தார்.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon