மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

மோடிக்கு  ஸ்டாலின் கடிதம்!

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை நேரில் தெரியப்படுத்த அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்திக்க நேரம் ஒதுக்குங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திமுக அதன் தோழமைக் கட்சிகள் சார்பாக மறியல், முழுஅடைப்பு, காவிரி உரிமை மீட்புப் பயணம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி முடித்துள்ளனர். நேற்று காவிரி விவகாரம் தொடர்பாக திமுக மீண்டும் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தீவிர அழுத்தம் கொடுக்கவும் – தமிழகத்தில் விவசாயிகளும், பொதுமக்களும் படும் இன்னல்களை நேரில் எடுத்துரைக்கவும் – அனைத்துக்கட்சித் தலைவர்கள் பிரதமரைச் சந்திப்பது என்றும், அதற்குரிய நேரம் கேட்பது" என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்தச் சூழ்நிலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திரமோடிக்கு இன்று (ஏப்ரல் 17) கடிதம் எழுதியுள்ளார். அதில், "காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் தன்னெழுச்சியாக புறப்பட்டுள்ள மக்களின் உணர்வுகளை நேரடியாகத் தெரியப்படுத்த அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்திக்கத் தாங்கள் நேரம் ஒதுக்க வேண்டும். காவிரி உரிமையைத் தமிழக அரசு பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர். இந்த விவகாரத்தில் பிரதமர் உடனடியாகத் தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டும், தீர்ப்பை அமல்படுத்த மூன்று மாதங்கள் நேரம் கேட்டும் தாக்கல் செய்த மனு அநீதியானது என்பதால்,மத்திய அரசு மனுவை திரும்பப் பெற வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், மே 3ஆம் தேதி வரை காத்திருக்காமல் உடனடியாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்குமாறு பேசிய நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் செயலாளரைக் கண்டிக்க வேண்டும் என்றும் அதில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon