மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

புலிட்சர் விருது வென்ற பத்திரிகைகள்!

புலிட்சர் விருது வென்ற பத்திரிகைகள்!

ஊடகம், இலக்கியத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கான புலிட்சர் விருதுகள் நேற்று (ஏப்ரல் 16) அறிவிக்கப்பட்டன.

ஹங்கேரிய அமெரிக்கப் பத்திரிகையாளர் ஜோசேப் புலிட்சர் பெயரில் 1912ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஊடகவியல், இணைய ஊடகம், இலக்கியம் மற்றும் இசையமைப்பு ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்காக விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, 2018ஆம் ஆண்டுக்கான புலிட்சர் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதில், அமெரிக்க ஊடகங்களான தி நியூ யார்க் டைம்ஸ் (The New York Times), வாஷிங்டன் போஸ்ட் (Washington Post), தி நியூ யார்கெர்( The New Yorker), பிரெஸ் டெமோக்ரட் (Press Democrat), அரிசோனா ரிபப்ளிக் (Arisona Republic), யுஎஸ்ஏ டுடே (USA Today), தி சின்சின்னாட்டி என்கொயர் (Cincinnati Enquirer), ராய்ட்டர் (Reuters), அலபாமா (Alabama), நியூ யார்க் மேகசின் (New York Magazine), தி டெஸ் மாயின்ஸ் ரெஜிஸ்டெர் (The des moines register) ஆகியவை பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளன.

பாலியல் முறைகேட்டை அம்பலப்படுத்தியதற்காக தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு புலனாய்வுப் பிரிவுக்கான புலிட்சர் விருது வழங்கப்பட்டுள்ளது. 2016 அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்த செய்திகளை வெளியிட்டதற்காக நியூ யார்க் டைம்ஸ், தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைகளுக்கு தேசிய செய்திகள் பிரிவுக்கான புலிட்சர் விருதுகள் வழங்கப்பட்டன.

ரோஹிங்யா முஸ்லிம்கள் விவகாரம் உட்பட பல்வேறு சர்வதேச நிகழ்வுகளை வெளியிட்டதற்காக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கும் 2 புலிட்சர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரே ஆண்டில் ராய்ட்டர் 2 விருதுகளை வென்றது இதுவே முதன் முறை.

ஆலிவுட் தயாரிப்பாளர் ஹார்வே வெய்ன்ஸ்டெய்ன் என்பவருக்கு எதிராக ஏராளமான பெண்கள் பாலியல் புகார்களைக் கூறியிருந்தனர். இந்த செய்தியின் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தியதற்காக பொதுச் சேவைப் பிரிவுக்கான புலிட்சர் விருதுகள் தி நியூ யார்க் டைம்ஸ் மற்றும் நியூ யார்கெர் பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஆண்ட்ரூ சீன் கிரீர் (Andrew Sean Greer) என்பவர் எழுதிய லெஸ் என்ற புத்தகம் ஃபிக்‌ஷன் பிரிவுக்கான விருதை வென்றுள்ளது. ஜாக் இ.டேவிஸ் (Jack E. Davis) எழுதிய தி கல்ஃப் என்ற புத்தகமும், மேக்கிங் ஆஃப் அன் அமெரிக்கன் சீ என்ற புத்தகமும் வரலாற்றுப் பிரிவில் விருதை வென்றுள்ளன. கரோலின் ஃப்ராசெர் (Carolyn Fraser) எழுதிய ப்ராய்ரி ஃபயர்ஸ், தி அமெரிக்கன் ட்ரீம்ஸ் ஆஃப் லாவ்ரா என்ற புத்தகமும் வாழ்க்கை வரலாறு பிரிவில் புலிட்சர் விருதை வென்றுள்ளது. ஃப்ராங் பிடார்ட் (Frank Bidart) எழுதிய ஹால்ஃப் லைட் என்ற புத்தகம் கவிதை பிரிவில் விருதுகளை வென்றுள்ளது.

கெண்ட்ரிக் லாமர் (Kendrick Lamar)இயற்றிய டாம்ன் என்ற ஆல்பம் சிறந்த பாடல் விருதை வென்றுள்ளது. மார்ட்டினா மஜோக் (Martyna Majok) என்பவர் இயற்றிய காஸ்ட் ஆஃப் லிவிங் என்ற நாடகம் விருதை வென்றுள்ளது.

தி நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையின் ஃப்ரீலான்ஸ் எழுத்தாளர் ஜேக் ஹால்பர்ன், ஃப்ரீலான்ஸ் கார்ட்டூனிஸ்ட் மைக்கேல் ஸ்லோன் ஆகியோர் எடிட்டோரியல் கார்ட்டூனிஸ்ட் பிரிவில் விருதுகளை வென்றுள்ளனர்.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon