மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஏப் 2020

சந்திரபாபு நாயுடுவின் சாயம் வெளுத்துவிட்டது!

சந்திரபாபு நாயுடுவின் சாயம் வெளுத்துவிட்டது!

ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமெனக் கோரி, நேற்று (ஏப்ரல் 16) அம்மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தியது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள். இதனைக் கவிழ்க்க முயற்சித்ததன் மூலமாக, ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் சாயம் வெளுத்துவிட்டதாக விமர்சித்துள்ளார் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் உம்மாரெட்டி வெங்கடேஸ்வரலு.

ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமென, அம்மாநிலத்தின் பிரதான கட்சிகளாக இருந்துவரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. கடந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதியில், இந்த கோரிக்கையை முன்வைத்து மக்களவையை முடக்கினர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பிக்கள். மேலும், கடந்த மார்ச் 16ஆம் தேதியன்று நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும் கொண்டுவர நோட்டீஸ் அளித்தது அக்கட்சி. அது குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறாததால், தங்களது எம்பிக்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி. இதனைத் தொடர்ந்து, அக்கட்சியைச் சேர்ந்த 6 எம்பிக்களும் டெல்லி ஆந்திரா பவனில் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதேபோல, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் எம்பிக்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்தார் ஜெகன்மோகன். ஆனால், அதனை தெலுங்கு தேசம் கட்சி புறக்கணித்துவிட்டது.

இந்த நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள், நேற்று ஆந்திரா முழுவதும் முழு அடைப்பு போராட்டத்தை முன்னெடுத்தன. ஆங்காங்கே இதற்கு வரவேற்பு கிடைத்தாலும், முழு அளவில் இது வெற்றி பெறவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆளும் தெலுங்கு தேசம் கட்சி முழு அடைப்பை முடக்கும் முயற்சியில் ஈடுபட்டதே இதற்குக் காரணம் என்று கூறியுள்ளது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி. ”சிறப்பு மாநில அந்தஸ்து பெறுவதற்கான முயற்சியை ஆதரிக்காமல், அரசு எந்திரத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி முழு அடைப்பைக் கவிழ்க்கும் முயற்சியை மேற்கொண்டார் சந்திரபாபு நாயுடு. இதன் மூலமாக, அவரது உண்மையான நோக்கம் தெரிய வந்துள்ளது. சிறப்பு அந்தஸ்து பெரிய விஷயமல்ல என்று சொல்லி வந்தவர், அதன் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, தனது கட்சியின் எம்பிக்கள் பதவியை ராஜினாமா செய்யமாட்டார்கள் என்றார்.

பதவியை ராஜினாமா செய்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பிக்கள் உண்ணாவிரதம் இருந்தபோது, அவர்களது உடல்நலம் பற்றி விசாரிப்பது அடிப்படை பண்பு. அதைக் கூட மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்யவில்லை” என்று தெரிவித்தார் வெங்கடேஸ்வரலு. இந்த முழுஅடைப்பை எதிர்த்ததன் மூலமாக, சந்திரபாபு நாயுடுவின் சாயம் வெளுத்துவிட்டதாக, அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்வது பற்றி தெலுங்கு தேசம் கட்சி கேள்வி கேட்கத் தேவையில்லை என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவிகளை ராஜினாமா செய்வதே போராட்டத்தை வலுப்படுத்தும் என்றும், ராஜிவ் காந்தியின் காலத்தில் இதேபோன்று தெலுங்கு தேசம் கட்சியினர் செயல்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

சிறப்பு மாநில அந்தஸ்து கோரி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜெகன் மோகன் மேற்கொண்டுவரும் ’பிரஜா சங்கல்ப யாத்திரை’ விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, வரும் ஜூன் மாதத்தில் அக்கட்சியைச் சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு ஆந்திரா சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், இடைப்பட்ட காலத்தில் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பில்லை. இதனைப் பயன்படுத்தி, சந்திரபாபு நாயுடுவின் செல்வாக்கைக் குறைக்க ஜெகன்மோகன் ரெட்டி முயற்சிப்பதாகச் சொல்லப்படுகிறது.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon