மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 31 மா 2020

போலி டீமேட் கணக்கால் பணத்தை இழந்த ஆசிரியை!

போலி டீமேட் கணக்கால் பணத்தை இழந்த ஆசிரியை!

மும்பையைச் சேர்ந்த ஆசிரியை புதிதாக டீமேட் கணக்கு துவங்க, கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு தகவல்களை கொடுத்து ரூ.1.57 லட்சம் இழந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை தாதர் பகுதியில் உள்ள காது கேளாத மற்றும் வாய் பேசாதோருக்கான சிறப்புப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிபவர் சீத்தல் கேடன் தக்கர். இவர் ஏப்ரல் 13ஆம் தேதியன்று மும்பை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் கூறியிருப்பதாவது:

"புதிதாக டீமேட் கணக்கு தொடங்குவதற்காக இன்டர்நெட்டில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் இணையதளங்களைத் தேடினேன். அதில் வாடிக்கையாளர் சேவை அதிகாரியைத் தொடர்புகொண்டு விவரத்தைக் கூறினேன். அப்போது அவர் எனது டெபிட் கார்டின் 16 இழக்க எண் மற்றும் சிவிவி எண் ஆகியற்றைக் கேட்டார். பின்னர் என் போனுக்கு வந்த ரகசிய ஓடிபி எண்ணையும் கேட்டுப் பெற்றுக்கொண்டார். அப்போது என் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதை அறிந்து, இதைப் பற்றி அவர்களிடம் கேட்டேன். டீமேட் கணக்கில் அந்தப் பணம் வரவாகிவிடும் என்று கூறிச் சமாளித்தனர்.

இதனையடுத்து அந்த நபர் என்னை மீண்டும் தொடர்புகொண்டு, வேறு ஏதேனும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வைத்துள்ளீர்களா என்று கேட்டு அதன் தகவல்களையும் பெற்றுக்கொண்டார். இதெல்லாம் எதற்கு என்று கேட்டதற்கு, இது நாங்கள் வழக்கமாகச் செய்யும் வழிமுறை என்று கூறினார். அடுத்த நாள் நான் அந்த நம்பரைத் தொடர்புகொண்டபோது அது அணைத்துவைக்கப்பட்டிருந்தது.

ஐந்து நாட்கள் கழித்து சம்பந்தப்பட்ட வங்கிக்கு நேரில் சென்று கேட்டபோது அந்த மொபைல் எண் எங்கள் வங்கியுடையது அல்ல என்று கூறிவிட்டனர். இது மக்களை ஏமாற்ற உருவாக்கப்பட்ட போலி இணையதளம் என்று சந்தேகிப்பதாவும் தெரிவித்தனர்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தற்போது 419 (தனிப்பட்ட நபரை ஏமாற்றிய குற்றம்), 420 (ஏமாற்றுவது மற்றும் தவறான முறையில் சொத்துக்களை அபகரித்தல்), 2000ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 (சி) மற்றும் (டி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாட்டூங்கா காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் விஜயகுமார் அம்பார்கே, அந்த எண் ஜார்கண்ட் பகுதியைச் சேர்ந்தது என்பதைக் கண்டுபிடித்துள்ளோம். இது குறித்து விசாரணை நடந்துவருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon