மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 31 மா 2020

காமன்வெல்த்: பரிசுத்தொகை அறிவித்தது தமிழக அரசு!

காமன்வெல்த்: பரிசுத்தொகை அறிவித்தது தமிழக அரசு!

காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள், வீராங்கனைகளுக்குத் தமிழக அரசின் சார்பில் பரிசுத்தொகை வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் ஏப்ரல் 4ஆம் தேதியன்று கோலாகலமாகத் தொடங்கியது 21ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (ஏப்ரல் 15) இது முடிவடைந்தது. 71 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் இந்தியா 66 பதக்கங்களுடன் மூன்றாவது இடம்பிடித்தது. இதில், 26 தங்கப் பதக்கங்களும் அடக்கம்.

இந்தப் போட்டியில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்டு பதக்கம் வென்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கு, நேற்று (ஏப்ரல் 16) பரிசுத்தொகை வழங்கப்படுவதாக அறிவித்தார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

இதன்படி, டேபிள் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் மற்றும் தனிநபர் பிரிவில் முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வென்ற சரத் கமலுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளி, கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளி வென்ற தீபிகா பல்லிகலுக்கு ரூ.60 லட்சம் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளி வென்ற ஜோஸ்னா சின்னப்பாவுக்கு ரூ.30 லட்சமும், டேபிள் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் வெள்ளி, கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்ற சத்தியனுக்கு ரூ.50 லட்சமும் வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் சார்பில் போட்டியில் வென்றவர்களை வாழ்த்தி, ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon