மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 31 மா 2020

ஆர்யா கலர் கலராகச் சுட்ட வடைகள்!

ஆர்யா கலர் கலராகச் சுட்ட வடைகள்!

ஒரு மாதமாக இந்தச் சம்பவத்துக்காகப் பலர் காத்துக்கொண்டிருக்கின்றனர். அழைத்துவந்த 16 பெண்களில் ஒருவரைத் திருமணத்துக்குத் தேர்ந்தெடுக்கக் காத்திருக்கும் ஆர்யாவின் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியின் ரசிகர்களைப் பற்றிச் சொல்லவில்லை. அந்த நிகழ்ச்சிக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மகளிர் அமைப்பினர் மற்றும் தமிழகப் பெற்றோர்கள் ஆகியோர் எதிர்பார்த்திருந்த நாள் வந்துவிட்டது.

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஆர்யா செய்தது அனைத்துமே ஒவ்வொரு ரூபத்தில் பிரச்சினையை உண்டாக்கியது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்ணின் வீட்டுக்குச் செல்வதற்காக கும்பகோணம் சென்றபோது, அங்கிருக்கும் மகளிர் அமைப்பினரால் திருப்பி அனுப்பப்பட்டார். அதேபோல, இலங்கையிலுள்ள நூலகம் ஒன்றில் ஷூட்டிங் நடத்தியபோது, விதிமுறைகளை மீறியதாகப் பிரச்சினை உருவாகி அங்கிருந்து அனுப்பப்பட்டார் ஆர்யா.

இப்படி இந்நிகழ்ச்சியால் ஏற்பட்ட போராட்டங்களை ஒருமுகப்படுத்தி, நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுக்கு வந்திருக்கும் மூன்று பெண்களையும் ஆர்யா வேண்டாமென்று ஒதுக்கியதைக் காரணமாக வைத்து ‘இது திட்டமிட்ட பொழுதுபோக்கு முயற்சி தானே... தவிர யாருக்கும் பெண் பார்க்கும் படலம் இங்கு நடைபெறவில்லை. நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள், கலந்துகொண்ட பெண்கள் என அனைவரையும் முட்டாளாக்கும் முயற்சி இது’என்பன போன்ற காரணங்களை முன்வைத்து இந்நிகழ்ச்சிக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கக் காத்திருக்கின்றனர் குறிப்பிட்ட சிலர்.

கலந்துகொண்ட பெண்களில் கடைசி சுற்றுக்கு முன்னேறியிருக்கும் சீதாலக்ஷ்மி, அகதா, சூசன் ஆகிய மூவரிடமும் ஒவ்வொரு குறை இருப்பதாகச் சொல்லியும், ஒருவரைத் தேர்ந்தெடுத்து இன்னொருவரை நிராகரித்தால் அவரது மனம் புண்படும் என்று கூறியும் நிகழ்ச்சியை முடித்திருக்கிறார் ஆர்யா. இத்துடன் எல்லாம் முடிந்துவிட்டாலும் பிரச்சினை இல்லை. வேறொரு ரூபத்தில் மீண்டும் இதையே நடத்தப்போவதாகக் கூறியிருப்பதால் இது கண்டிப்பாக தடுத்து நிறுத்தப்பட வேண்டிய நிகழ்ச்சியாக இருக்கிறது என்றார் போராட்டத்துக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் ஒருவர்.

எந்த ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு இப்போராட்டத்தை முன்னெடுக்கிறீர்கள் என்று நாம் கேட்டபோது “நானே நேரில் பார்த்தேன். அந்தப் பெண் ‘பரவாயில்லை விடுங்க. எப்பவும் மாப்பிள்ளை வீட்டுக்கு வந்து பாத்துட்டு, சாப்டுட்டுப் போனதுக்கு அப்புறம் அது சரியில்லை, இது சரியில்லைன்னு குறை சொல்வாங்க. இந்த விஷயத்துல நான் இங்கே வந்திருக்கேன். இவ்வளவு புகழ் கிடைச்சிருக்கு” என்று குரல் தழுதழுக்க சொல்லும்போது பெண் பிள்ளையைப் பெற்ற அனைவருக்கும் கோபம் வரத்தான் செய்யும் என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார்.

தொலைக்காட்சி சேனலில் இந்த நிகழ்ச்சியைத் தொடங்கியபோது எதிர்பார்த்த வெற்றியை எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி பெறவில்லை. இதுவரை நடந்தவற்றைவிட மிகப்பெரிய போராட்டங்களை எதிர்பார்த்தது. ஆனால், மற்ற டிவி சேனல்களில் ஒளிபரப்பப்படும் சுவாரஸ்யமில்லாத நிகழ்ச்சிகளின் ரசிகர்களைக்கூட மாப்பிள்ளையால் இழுக்க முடியவில்லை என்பதே நிதர்சனம்.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon