மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 29 மா 2020

பழங்குடியின மொழியில் பேசிய மோடி

பழங்குடியின மொழியில் பேசிய மோடி

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த விழாவொன்றில் கலந்துகொண்ட பிரதமர் மோடி ஹல்பி எனும் பழங்குடியின மொழியில் பேசியதாகத் தெரிவித்துள்ளார் அம்மாநில முதலமைச்சர் ரமண்சிங். இவ்வாறு பேசியதால், அந்த நிகழ்வில் கலந்துகொண்ட 40 ஆயிரம் மக்களும் அவரது அலைவரிசைக்குள் வந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமையன்று (ஏப்ரல் 14) சத்தீஸ்கர் மாநிலத்தின் தெற்கு பஸ்தார் மண்டலத்திலுள்ள பிஜாபூர் மாவட்டத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தியாவின் சுகாதாரச் செயல்பாடுகளில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவரவுள்ள இத்திட்டமானது, நாட்டில் முதன்முறையாக பிஜாபூர் மாவட்டத்தில் தொடங்கப்படுவது பெருமையானது என்று கூறினார் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் ரமண்சிங். நியூஸ் 18 ஊடகத்துக்கு அளித்த பேட்டியொன்றில், அவர் இவ்வாறு பேசினார்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைத் தொடங்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடி, அப்பகுதியைச் சார்ந்த பழங்குடியின மக்களின் ஹல்பி மொழியில் உரையாற்றினார். இதைக் குறிப்பிட்ட ரமண்சிங், அவரது பேச்சுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்ததாகத் தெரிவித்தார். “அவர்களது மொழியில் சேர்ந்தாற்போல நான்கு வாக்கியங்கள் பேசினாலே, அவர்களது நம்பிக்கை அதிகரிக்கும். தான் பேசத்தொடங்கிய முதலாவது நிமிடத்திலேயே, மக்களுடன் இரண்டறக் கலந்துவிட்டார் பிரதமர் மோடி. ஹல்பி மொழியில் பேசியதனால் மொழி வேற்றுமை உடைந்து, அனைவரும் மோடியின் அலைவரிசைக்கு வந்துவிட்டனர்” என்று கூறினார். இந்தத் திட்டத்தின் மூலமாக, பிஜாபூர் மற்றும் தந்தேவாதா மாவட்டங்களைச் சேர்ந்த 300 இளைஞர்களுக்கு பிபிஓக்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார் ரமண்சிங்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் ஓங்கியிருந்ததாகத் தெரிவித்தார். சாலை மற்றும் மின்சார வசதியினால் அப்பகுதிகளில் மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருப்பதாகவும், மாநிலம் முழுவதும் 55 லட்சம் ஸ்மார்ட்போன்களை இளைய தலைமுறையினருக்கு வழங்கும் எண்ணத்தில் சத்தீஸ்கர் அரசாங்கம் இருப்பதாகவும், அவர் தன் பேச்சில் குறிப்பிட்டார்.

தெற்கு பஸ்தார் மண்டலத்தைச் சுற்றி மகாராஷ்டிரா, ஆந்திரா, ஒடிசா மற்றும் தெலங்கானா மாநிலங்கள் இருப்பதாகத் தெரிவித்தார் ரமண்சிங்.

“முன்பெல்லாம் கட்டட வேலைகளைச் செய்பவர்களை மிரட்டி, அதைத் தடுத்தனர் நக்சலைட்டுகள். அதன்பின், அந்த வேலையில் ஈடுபடுபவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தோம். நக்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாலைகள் இடுவது என்பது உலகிலேயே மிகவும் கஷ்டமான ஒரு பிரச்சினை. அதையும் நாங்கள் எதிர்கொண்டோம். நக்சலைட்டுகள் சீருடை அணிந்து போரிட மாட்டார்கள்.

கிராமத்தினர், குழந்தைகள், பெண்கள் ஆகியோரைக் கேடயமாக வைத்துக்கொண்டு, இவர்கள் கெரில்லா முறையில் போராடுகின்றனர். இதன் தலைவர்கள்கூட, இந்தப் பகுதியைச் சார்ந்தவர்கள் இல்லை. ஆந்திராவிலும், ஒடிசாவிலும் இருந்து இவர்கள் சத்தீஸ்கர் வருகின்றனர். பிற மாநில எல்லைகள் அருகே இருப்பதால், தெற்கு பஸ்தார் பகுதியில் நக்சல் பிரச்சினையைத் தீர்ப்பது கடினமாக இருந்து வருகிறது” என்று குறிப்பிட்டார் ரமண்சிங்.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon