மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 9 ஜூலை 2020

தமிழக அரசு காப்பாற்றுமா, கைவிடுமா?

தமிழக அரசு காப்பாற்றுமா, கைவிடுமா?

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 47

இராமானுஜம்

இந்திய சினிமாவில் 45 நாள்களைக் கடந்து நடைபெற்றுவரும் திரைப்படத் துறையினர் வேலைநிறுத்தம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் ஏற்பாட்டின்படி திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், வேலைநிறுத்தம் நடைபெறக் காரணமாக இருந்த டிஜிட்டல் நிறுவனங்கள் கலந்து கொள்ளும் முத்தரப்பு கூட்டம் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.

நேற்று (16.04.18) மாலை திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தரப்பில் முக்கியமானவர்கள் கூடிப் பேசியிருக்கிறார்கள். அப்போது, முத்தரப்பு கூட்டத்தில் தங்கள் தரப்பில் வைக்க வேண்டிய கோரிக்கைகளை இறுதி செய்திருப்பதாகத் தெரிகிறது. ஏற்கெனவே தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் அமைச்சரிடம் தனிப்பட்ட முறையில் தங்களுக்குச் சாதகமான முடிவுகளை எடுப்பதற்கு ஆவண செய்ய சில பேரங்கள் பேசப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதை வைத்தே தனித் திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் இணக்கமாகப் போய்விடாமல் தடுக்கப்பட்டது எனச் சொல்லப்படுகிறது.

எப்போதும் இல்லாத வகையில் தயாரிப்பாளர்கள் தரப்பில் ஒற்றுமை உணர்வு மேலோங்கியிருந்தது. இதைச் சீர்குலைக்கும் முயற்சியில் தியேட்டர் சிண்டிகேட் தரப்பும், டிஜிட்டல் நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பாளர் சங்க முன்னாள் நிர்வாகியாக இருந்த தேனான அப்பா மூலம் முயற்சித்ததாகவும் அதைத் தயாரிப்பாளர்கள் ஒற்றுமை முறியடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கீழ்க்காணும் கோரிக்கைகளை முன்வைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

1. புதிய டிஜிட்டல் நிறுவனங்களைத் தமிழ் சினிமாவில் தொழில் தொடங்க அனுமதிப்பதைக் கொள்கை ரீதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

2. ஆன்லைன் டிக்கெட் கட்டண முன்பதிவு சர்வீஸ் சார்ஜ் குறைப்பு.

3. டிக்கெட் கட்டணம் சீரமைப்பு.

4. அனைத்துத் திரையரங்க டிக்கெட் விற்பனையும் கணினி மயமாக்குவது. அதன்மூலம் படங்களின் உண்மையான வசூல், அதற்கு முறையான வரியை அரசுக்குச் செலுத்த வேண்டும்.

5 டிஜிட்டல் நிறுவனங்களின் கட்டணத்தை முறைப்படுத்திக் குறைப்பது.

மேற்கண்டவற்றில் பெரும்பாலான கோரிக்கைகள் எளிதில் நடைமுறைப்படுத்தக்கூடியது என்றாலும், வேலைநிறுத்தத்துக்குப் பிரதான காரணமாக இருக்கும் VPF கட்டணத்தைத் தயாரிப்பாளர்கள் செலுத்துவது தொடர்பாக இன்று இறுதி முடிவு எட்டப்படுமா என்பதில் சிக்கல் தொடர்கிறது.

ஏப்ரல் 20 முதல் படப்பிடிப்புகளை தொடங்குவதற்குத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்கெனவே முடிவு செய்துள்ளது. புதிய படங்களின் ரிலீஸ் இம்மாத இறுதியில் இருக்கும் எனக் கூறப்பட்டாலும், தயாரிப்பாளர்கள் சங்க கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டால் தங்கள் பொதுக்குழுக் கூட்டம் நடத்தி தங்கள் முடிவை அறிவிக்க அவகாசம் கேட்கவும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

சினிமாவை நம்பி தொழில் செய்து வந்தவர்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தால்தான் தொழிலாளர்களின் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் கல்விக் கட்டணம் செலுத்த முடியும்.

தங்களுக்குள் இருக்கும் ஈகோவை தூக்கி எறிந்துவிட்டு முத்தரப்பும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டால் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்து தமிழ் சினிமா சகஜ நிலைக்குத் திரும்பும். நல்லது நடக்குமா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38 பகுதி 39 பகுதி 40 பகுதி 41 பகுதி 42 பகுதி 43 பகுதி 44 பகுதி 45 பகுதி 46

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon