மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 29 மா 2020

சிறப்புக் கட்டுரை: மறக்கவியலாத துயரமும் மனவியாதிதான்!

சிறப்புக் கட்டுரை: மறக்கவியலாத துயரமும் மனவியாதிதான்!

டாக்டர் சுனில்குமார், டாக்டர் ஜெயசுதா காமராஜ்

சிறப்புத் தொடர்: உங்கள் மனசு

மறக்கவே இயலாத துயரம் என இந்தப் புவியில் எதுவும் கிடையாது. எல்லாத் துயரும் என்றாவது ஒருநாள் தீரும் அல்லது மறையும். மாற்றத்தை மட்டுமே சுவைத்துவரும் இந்தப் பிரபஞ்சத்தின் தவிர்க்க இயலாத குணம் இது. ஆனாலும், நாம் சோகம், துக்கம், வருத்தம், ஆற்றாமை என்று புலம்பித் தவிக்கிறோம்; சில வேளைகளில் எல்லாவற்றையும் மனதினுள் புதைத்து மவுனிக்கிறோம். காயம் என்றாவது ஒருநாள் தழும்பாகும் என்பது இயற்கை விதி. இதையும் மீறி, சில துயரங்கள் தழும்பான பின்பும் நம் வாழ்நாளில் நிழலாய்த் தொடரும். பல்வேறு இன்னல்களுக்கு நம்மை ஆளாக்கும்.

இதை பெத்தாலஜிகல் க்ரீப் டிசார்டர் (Pathological Grief Disorder) என்று மனநல மருத்துவத்தில் குறிப்பிடுகிறார்கள். பொதுவாக, துயரம் அல்லது துக்கம் என்பது மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை ஒருவரை பாதிப்பது இயல்பு. ஆனாலும், ஒருவரது இறப்பினால் உண்டான துக்கத்தில் இருந்து மீள முடியாமல் போகும் நிலைமை (Pathological Grief) சில மனிதர்களுக்கு வாய்க்கும்.

ஒருவரது இழப்பின் துக்கம் நம்மைச் செயல்படவிடாமல் தடுத்தால், அழித்தால் அது கண்டிப்பாக மனவியாதிதான். அப்படியான நபராகத்தான் காசிராஜன் எங்களைச் சந்திக்க வந்தார். வலுக்கட்டாயமாக அவர் மைண்ட் ஸோன் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். ஆனால், தன்னை மனநல சிகிச்சைக்கு உறவினர்கள் அழைத்து வந்ததை அவர் எதிர்க்கவில்லை. தன்னை மனநோயாளி என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளும் உடல்மொழி அவரிடம் தென்பட்டது. இத்தனைக்கும் எங்களைச் சந்தித்தபோது அவரது வயது 27க்குள்தான் இருக்கும். சில மாதங்களுக்கு முன்பு வரை, கனடாவில் ரூபாய் 5 லட்சம் வரை சம்பளமாகப் பெற்றுக்கொண்டிருந்தவர் காசிராஜன்.

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசக்கூடியவர். கணினித் துறையில் வல்லுநர். மது உள்ளிட்ட எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவர். நல்ல பையன் என்று எல்லோரிடமும் நற்பெயர் பெற்றவர். அம்மாவின் செல்லப் பிள்ளையாக இருந்தவர். இப்படிப் பல்வேறு அம்சங்கள் காசிராஜனிடம் இருந்தன. கை நிறைய சம்பளம், மற்றவர் பொறாமைப்படும்படியான வளர்ச்சி என்றிருந்தவர், ஏன் மனநல சிகிச்சைக்கு அழைத்துவரப்பட்டார்? அவரது உறவினர்கள் என்ன நடந்தது என்று விவரம் தெரிவித்தனர்.

துயரம் என்னும் எரிமலை

சென்னை, பெங்களூருவில் பணியாற்றிக்கொண்டிருந்த காசிராஜனுக்கு, கனடா செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அங்கு செல்வதில் அவருக்கு விருப்பமில்லை. ஆனால் தாயின் கட்டாயத்தின்பேரில், காசிராஜன் கனடா சென்றார். ஆறு மாதங்களில் அங்கு செட்டில் ஆகிவிட்டால், உடனடியாகத் தாயைத் தன்னுடன் அழைத்துவர வேண்டுமென்பது அவரது திட்டம். அதற்கேற்ற ஏற்பாடுகளையும் அவர் செய்துவந்தார். இந்த நிலையில்தான் திடீரென்று காசிராஜனின் தாய் வனிதா மறைந்துவிட்டார் என்ற தகவல் வந்துசேர்ந்தது.

இதைக் கேட்டதும் காசிராஜன் கதறி அழவில்லை. கனடாவின் பெருநகரமொன்றின் மத்தியிலிருந்த தனது அபார்ட்மென்டில் இருந்து வெளியே வந்தார். சாலையின் நடுவே வந்து கூச்சலிட்டார். பாதையைத் தவறவிட்ட விலங்கினைப் போல, அங்குமிங்கும் ஓடினார். எல்லோரும் திகைத்து நின்றபோது, அவர் ‘ஓ’வென்று ஓலமிட்டார். அவ்வளவுதான். கனடா நாட்டுக் காவல் துறையினர் அவரைக் கைது செய்தனர். அவர்கள் விசாரணை நடத்தியபோது அவர் பதிலேதும் சொல்லவில்லை.

இதனால், அங்குள்ள மனநல மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். அங்கு நான்கு மாதங்கள் தங்க வேண்டுமென்ற கட்டாயத்தினால், காசிராஜனால் தனது தாயின் ஈமச்சடங்குகளில் கலந்துகொள்ள முடியவில்லை. அங்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகே, அவர் இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டார். இந்தியா வந்த பிறகும் அவரது நிலையில் பெரிய மாற்றமில்லை.

முன்பு இருந்ததுபோல, அவர் இயல்பாக இல்லை. பேசுவதில்லை; சிரிப்பதில்லை; யாருடனும் பழகுவதில்லை; சரியாகத் தூங்குவதில்லை; தனக்குத் தானே பேசிக்கொண்டிருக்கிறார் என்று அவரது செயல்பாடுகள் குறித்து வருத்தம் தெரிவித்தார் அவரது சகோதரர். இவர்தான் காசிராஜனை மைண்ட் ஸோன் மருத்துவமனைக்கு அழைத்துவரக் காரணமாக இருந்தவர்.

காசிராஜனின் சகோதரருக்கு, அவரைவிட இரண்டு வயது குறைவு. அவர் காதல் திருமணம் செய்துகொண்டவர். அவரது மனைவியும் குழந்தையும்கூட மருத்துவமனை வந்திருந்தனர். அவரை அவர்கள் நேசிப்பது கண்கூடாகத் தெரிந்தது.

காசியின் மீது அவரது சகோதரருக்குப் பெரிதாக குறைகள் இல்லை. ஆனால் அவரை வீட்டில் வைத்துப் பராமரிப்பதைத் தவிர்த்தார். தன் மனைவி, குழந்தையோடு வாழ்ந்துவந்தது மட்டுமே இதற்குக் காரணமில்லை. தங்களது தந்தை மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவார் என்றும், அவ்வப்போது காசியைத் திட்டிக்கொண்டே இருப்பார் என்றும் அதற்குக் காரணம் கூறினார்.

தாயின் மரணம் குழந்தைகளைப் பாதிக்கும் என்பது பொது விதி. ஆனால் தாயின் இழப்பைத் தாங்க முடியாத அளவுக்கு, அவரை எந்த அளவுக்கு நேசித்தார்? சரிசெய்யவே முடியாத துக்கமானது அவருக்குள் எத்தகைய பாதிப்பை உண்டாக்கியது? இந்த கேள்விகளுக்குப் பதில் தெரியாமல் அவரைச் சீராக்குவது கடினம் என்று உணர்ந்தோம்.

மற்றவர்களிடம் ஒரு சில நேரங்களில் தென்படும் மாற்றம், காசிராஜனைப் பொறுத்தவரை சில நாள்களாக இருந்தது. படுத்த இடத்தில் அப்படியே கிடப்பது, உட்கார்ந்த இடத்தில் அசையாமல் இருப்பது என்றிருந்தார். அவர் வாய்திறந்து பேசுவதற்குப் பல முயற்சிகள் செய்ய வேண்டியதிருந்தது.

வன்முறையின் ஆழமான தடங்கள்

அம்மா, அப்பா, தம்பி மற்றும் காசிராஜன் என்று நால்வர் அடங்கிய சின்னக் குடும்பம் அது. கூலி வேலை செய்துவந்த தந்தை தினகரன், தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். ஒவ்வொரு நாளும் தன் தந்தை தாயை அடிப்பதைப் பார்த்தே வளர்ந்தார் காசிராஜன். அப்பாவின் மீதிருந்த பயமும் வயதும், அதைத் தட்டிக்கேட்க முடியாதவராக அவரை மாற்றியிருந்தன.

தன் தந்தையின் மீதான பயத்தைப் பற்றி காசிராஜன் நிறைய தகவல்கள் சொன்னார். அப்பா தன்னிடம் அதிர்ந்து பேசினாலே சிறுநீர் கழித்துவிடுவேன் என்றும் அவர் சொன்னார். குழந்தைகள் இருப்பதைப் பொருட்படுத்தாமல் இழிவார்த்தைகளை உதிர்ப்பதும் வன்முறையைப் பிரயோகிப்பதுமாக இருந்திருக்கிறார் இவரது தந்தை.

சகோதரருக்கு விவரம் தெரியாத வயது என்பதால், தாய் அடிவாங்கியதைக் கண்டு காசிராஜன் மட்டுமே அழுவார். அதேபோல, இவரது தோளில் சாய்ந்துதான் தாயும் அழுவார். அப்போது, அவரைக் கட்டி அணைத்துக்கொள்வது காசிராஜனின் வழக்கம். பெரியவனாக வளரும்வரை அவரது இந்தச் செயல்பாட்டில் மாற்றமில்லை.

அப்பா அடிக்கும்போது, தாய்க்கு மருந்திடுவது இவரது வேலை. இதனால், வீட்டைவிட்டு வெளியில் சென்று சக வயது நண்பர்களுடன் விளையாடுவதைத் தவிர்த்தார் காசிராஜன். அந்த நேரத்தில், அம்மாவை அப்பா அடித்துவிடக் கூடாது என்று பயந்தார். பாசத்தாலும் பதற்றத்தாலும், தன்னுடைய குழந்தைமையையே அவர் இழந்துவிட்டார்.

“நன்றாகப் படிக்க வேண்டும்; பெரிய வேலைக்குப் போக வேண்டும்; அம்மாவைக் கண்கலங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.” இதுவே, சிறு வயதில் காசிராஜனின் குறிக்கோளாக இருந்தது. இதைப் பூர்த்தி செய்யும் விதத்தில், கல்வியில் முழு கவனத்தையும் செலுத்தினார். ஆனால் கல்லூரிக்குச் சென்றபோதும், கை நிறைய சம்பாதித்தபோதும், அவரால் தந்தையை எதிர்த்துப் பேச முடியவில்லை; அதற்கான தைரியம் வரவில்லை என்று சொன்னது ஆச்சர்யம்தான். இன்றைய காலத்தில், எந்தவோர் ஆணும் பெண்ணும் இவ்வாறு இல்லை என்றே சொல்லலாம்.

கல்லூரியில் படித்து முடித்தவுடன், சிலகாலம் சென்னை, பெங்களூரில் உள்ள நிறுவனங்களில் வேலை செய்தார் காசிராஜன். ஓரிரு ஆண்டுகள் அனுபவத்துக்குப் பிறகு, கனடாவில் பணியாற்றும் வாய்ப்பு அவருக்கு வந்தது. காசிராஜன் தயங்கியபோது, அவரை அங்கு செல்லுமாறு வற்புறுத்தியவர் அவரது தாய்தான்.

“இங்கேயே இருக்காதே. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா என்று ஏதாவது ஒரு நாட்டுக்கு போ; என்னையே சுற்றிச் சுற்றி வராதே. அங்கேயே செட்டில் ஆகிடு” என்று தாய் சொன்னதைக் கேட்ட பிறகே, அவர் ஊரைவிட்டுக் கிளம்பினார்.

அங்கு சென்ற சில நாள்களிலேயே, தனது தாயை உடன் வருமாறு அழைத்திருக்கிறார் காசிராஜன். ஆனால் அவரது தாய், ‘ஆறு மாத காலம் ஆகட்டும்’ என்றிருக்கிறார். தாய் கனடா வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்த நிலையில், இனிமேல் தானும் தனது தாயும் எந்தத் துயரும் இல்லாமல் வாழப்போகிறோம் என்று அவர் நினைத்த நிலையில்தான், அந்த மாபெரும் துக்கம் அவரைத் தாக்கியது. அவரது மனதைச் சிதைத்தது.

(அந்தத் தாக்கத்திலிருந்து அவர் எப்படி மீண்டு வந்தார்? நாளை..)

எழுத்தாக்கம்: உதய் பாடகலிங்கம்

கட்டுரையாளர்கள்:

டாக்டர் சுனில்குமார், மருத்துவ உளவியல் நிபுணர்

மைண்ட் ஸோன் மருத்துவமனையின் நிறுவனர். மணிபால் கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரியில் மருத்துவ உளவியல் பயின்றவர். மது போதை பற்றி ஆய்வுப் பட்டம் பெற்றவர். குழந்தைகள் மனநல மருத்துவராக, 2002 – 2009ஆம் ஆண்டுகளில் புதுச்சேரி அரசுப் பொது மருத்துவமனையில் பணியாற்றியவர். இவர், மனநல சிகிச்சை குறித்து தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஆய்வேடுகளைச் சமர்ப்பித்திருக்கிறார். சமகாலச் சமூகம் எத்தகைய மனநல பாதிப்புகளை எதிர்கொண்டுவருகிறது என்பதற்கான இவரது தீர்வுத் தேடல் தொடர்கிறது.

டாக்டர் ஜெயசுதா காமராஜ், உளவியல் நிபுணர்

மைண்ட் ஸோன் மருத்துவமனையின் இணை நிறுவனர். சென்னை பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் உளவியல் பிரிவில் எம்.பில் பட்டம் பெற்றவர். மது போதை குறித்து ஆய்வுப் பட்டம் பெற்றிருக்கிறார். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான கருத்தரங்குகளில் ஆய்வேடுகள் சமர்ப்பித்திருக்கிறார். குடும்ப நல ஆலோசனை, போதை மீட்பு, குழந்தை வளர்ப்பு மற்றும் பெற்றோர் திறம் போன்ற விஷயங்களைக் கையாளுவதில் வல்லுநர்.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon