மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 28 மா 2020

இந்தியாவுக்கு போக வேண்டாம்!

இந்தியாவுக்கு போக வேண்டாம்!

உங்கள் பெண் குழந்தைகளை இந்தியாவுக்கு அழைத்துச் செல்லாதீர்கள்’ என்ற வாசகங்கள் அடங்கிய டி-ஷர்ட் அணிந்து வெளிநாட்டுப் பயணிகள் தங்களது எதிர்ப்பைக் காட்டத் தொடங்கியுள்ளனர்.

இஸ்தான்புல் நகரின் விமானப் பயணிகள் இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறைக்கு எதிரான வசனங்கள் அடங்கிய டி-ஷர்ட்களை அணிந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் காஷ்மீர் கத்துவா பகுதியில் எட்டு வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மக்களைக் காக்க வேண்டிய காவல் துறை அதிகாரிகள், சிறார் உட்பட எட்டு பேர் சம்பந்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவ்விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக காஷ்மீரில் தேசியக் கொடியுடன் நடைபெற்ற பேரணியில் பாஜக அமைச்சர்களும் கலந்துகொண்டனர். நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவிடாமல் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது இஸ்தான்புல் நாட்டைச் சேர்ந்த விமானப் பயணிகளின் டி-ஷர்ட்டுகளில், ‘உங்கள் பெண் குழந்தைகளை இந்தியாவுக்கு அழைத்துச் செல்லாதீர்கள். இந்தியாவில் மாடுகளுக்கு இருக்கும் மதிப்புகூட பெண்களுக்கு இருப்பதில்லை. உங்கள் பயணத்தின் கடைசி நகரமாக இந்தியாவை வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் அது உங்கள் சுடுகாடாகக்கூட இருக்கலாம்’ போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

முன்னதாக கேரளாவில் உள்ள வீட்டு வாசலில், ‘வாக்கு சேகரிக்கவரும் பாஜகவினர் உள்ளே வராதீர். இந்த வீட்டில் 10 வயதில் சிறுமி இருக்கிறாள்’ என்ற வசனங்கள் அடங்கிய நோட்டீஸ் ஒட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பொதுவாக இதுபோன்ற வன்முறைகளுக்கு எதிராக அரசியல் கட்சிகள், தனியார் தொண்டு நிறுவனங்கள், மாதர் சங்கங்கள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்துவர். ஆனால், தற்போது அந்த நிலைமை மாறி மக்களே நேரடியாகக் குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இனியும் அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றை நம்பி பயனில்லை என்ற நிலைக்கு வந்துள்ள மக்கள் தன்னெழுச்சியாகவே தங்களது எதிர்ப்புகளைக் காட்ட தொடங்கியுள்ளனர்.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon