மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

ஸ்பெஷல்: அழகை மீட்கும் ஆயில் கிளென்சிங்!

ஸ்பெஷல்: அழகை மீட்கும் ஆயில் கிளென்சிங்!

அழகைப் பராமரிக்க பல நவீன வழிகள் இருந்தாலும் இயற்கை முறையே எப்போதும் பாதுகாப்பானது. எனவே இழந்த பொலிவை மீட்க வீட்டிலேயே ஆயில் கிளென்சிங் செய்யலாம். முகத்தில் எண்ணெய் பூசி சுத்தம் செய்வதே, ஆயில் கிளென்சிங். ஆனால் உங்கள் சருமத்திற்கு ஏற்ப சுத்தம் செய்யும் முறை மாறுபடுகிறது. ஏற்கனவே எண்ணெய்ப் பசை கொண்ட சருமம் எனில், எண்ணெயை பஞ்சில் தொட்டு முகத்தைச் சுத்தம் செய்ய வேண்டும். அதன் பின்னர் வெந்நீரில் துணியை நனைத்து, முகத்தின் மீது விரித்துவைக்கவும். துணியின் வெதுவெதுப்பு குறைந்தவுடன், மற்றொரு துணியினால் முகத்தை நன்றாகத் தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். இதுவே வறண்ட சருமம் என்றால் முகத்தில் எண்ணெயைத் தடவி, விரல்களைக் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் ரோஸ் வாட்டரில் பஞ்சை நனைத்து முகத்தைத் துடைத்தும், பின்னர் மாய்ஸ்சரைசரை முகத்தில் பூசி செய்யலாம்.

எந்தச் சருமத்திற்கு எந்த ஆயில்?

முகப்பரு மற்றும் எண்ணெய் சருமம்:

பிளாக் கேஸ்டர் ஆயில் (ஆமணக்கு எண்ணெய்) உடன் கிரேப் சீட் ஆயில் அல்லது சூரியகாந்தி எண்ணெய் சேர்த்து, கேஸ்டர் ஆயிலை நீர்த்துப்போகச் செய்து முகத்தைக் கழுவலாம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், பிளாக் கேஸ்டர் ஆயிலை அப்படியே உபயோகிக்கக் கூடாது. நீர்த்துப்போகச் செய்ய வேறு ஏதாவது ஆயிலை அதனுடன் சேர்க்க வேண்டும்.

உலர்ந்த சருமம்:

எல்லா வகை ஆயிலும் உலரும் தன்மை கொண்ட சருமத்தை சரி செய்வதில்லை. தேங்காய் எண்ணெய் சருமத்தை மேலும் உலர வைக்கும்.

அதனால் அவக்கோடா, ஆர்கன் ஆயில் ஆகியவற்றை உலர்ந்த சருமம் கொண்டவர்கள் பயன்படுத்தலாம்.

மிருதுவான சருமம்:

சென்சிடிவ் ஸ்கின் கொண்டவர்கள், தங்களின் சருமம் மீது மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆப்ரிகாட் கெர்னல் ஆயில், சென்சிடிவ் ஸ்கின் இருப்பவர்களுக்கு மிகவும் உகந்தது. ஏனென்றால் சரும தடிப்பு, வெடிப்பு, வறண்டுபோதல் ஆகியவற்றிற்கு இது நல்ல தீர்வைத் தருகிறது.

மற்ற வகையான சருமம்:

சன் பிளவர் ஆயில், ஹேசல்நட் ஆயில் மற்றும் சுவீட் அல்மாண்ட் ஆயில் ஆகியவற்றை, அவரவர் சருமத்திற்கு ஏற்றாற்போல் பயன்படுத்திக்கொள்ளலாம். குறிப்பாகப் புதிதாக ஆயில் கிளென்சிங் செய்பவர்கள், இந்த வகை எண்ணெய்களைப் பயன்படுத்தலாம்.

உங்கள் சருமத்திற்கு ஏற்றது எது?

உங்கள் முகத்தில் வடுக்கள் இருந்தால், எண்ணெய் கொண்டு சுத்தம் செய்வது நல்லது. ஏனென்றால் ஆயில் கிளென்சிங் முறை வடுக்களை முழுவதுமாக நீக்கிவிடும். ரொம்பவே உலர்ந்த அல்லது சீரற்ற சருமம் என்றாலும், ஆயில் கிளென்சிங் முறையை மேற்கொள்ளலாம். முகத்தின் சோர்வைப் போக்கி, மிருதுவாக மாற்ற இது உதவும். எண்ணெய்ப் பசை கொண்ட சருமம் என்றாலும்கூட, ஆயில் கிளென்சிங் முறையில் எண்ணெய்ப் பசைத் தன்மையை முழுவதுமாக நீக்கலாம். ஒவ்வாமை, காரணமின்றி தோலில் வெடிப்பு போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள், ஆயில் கிளென்சிங் முறையைத் தவிர்ப்பது நல்லது. எல்லா எண்ணெய்களும், எல்லோருக்கும் பொருத்தமானதல்ல. எனவே சரும பாதிப்புகள் ஏற்பட்டால் அவற்றைத் தவிர்ப்பதே சரியான வழிமுறையாகும்.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon