மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 28 மா 2020

ஸ்மார்ட்போன் அடிமைத்தனம்: தடுப்பது எப்படி?

ஸ்மார்ட்போன் அடிமைத்தனம்: தடுப்பது எப்படி?

கவலை, மனச்சோர்வு மற்றும் தனிமையில் உள்ளவர்களே ஸ்மார்ட்போன்களின் அடிமைத்தனத்துக்கு உள்ளாவதாக சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்தில் 135 மாணவர்களுக்கிடையே சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில் கவலை, மனச்சோர்வு மற்றும் தனிமையில் உள்ள மாணவர்களிடத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்களை அதிகம் பயன்படுத்துவது ஒரு பொருளை முறைகேடாகப் பயன்படுத்துவதாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சான் பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் எரிக் பெப்பர் கூறுகையில்...

“ஸ்மார்ட்போன் அடிமைத்தனம் நம் மூளை நரம்பியல் இணைப்புகளுக்குத் தொடர்புடையது. வலி நிவாரணத்துக்காக ஆக்ஸிகான்டின் மாத்திரைகளைப் பயன்படுத்தி நாளடைவில் அதுவே ஒரு பழக்கமாவதைப் போல் இந்த ஸ்மார்ட்போன் பயன்பாடும் ஒரு பழக்கமாக மாறிவிடுகிறது.

நியூரோ ரெகுலேசன் என்ற பத்திரிகையில் வெளியான ஆய்வறிக்கையில், உடல்மொழி மற்றும் சமிக்ஞைகளைக் கொண்டு நேருக்கு நேர் சந்திக்கத் தயாராகி உரையாடத் தயங்கும் ஒருவர் தனிமையை நாடுகிறார். அதில் சிலர் படிக்கும்போது ஊடகங்களைப் பார்ப்பது, சாப்பிடுவது, மற்ற செயல்களில் ஈடுபடுவது என ஒரே நேரத்தில் பல விதமான செயல்களைச் செய்கின்றனர். இதனால் அவர்களின் மூளையின் ஓய்வு நேரம் குறைகிறது.

பெருநிறுவனங்கள் தங்கள் லாபங்களை அதிகரிக்கத் தொழில்நுட்பங்களை மக்களிடம் உட்புகுத்துவதன் விளைவுதான் இந்த டிஜிட்டல் அடிமைத்தனம். ஆகவே இதில் நமது தவறு ஒன்றுமில்லை.

ஸ்மார்ட்போன் அல்லது கணினியிலிருந்து வரும் அறிவிப்புகள், அதிர்வுகள், பிற விழிப்பூட்டல்கள் நம் மூளையின் நரம்புப் பாதைகளை தூண்டி, அவற்றை உடனடியாக பார்க்க நிர்பந்திக்கிறது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, தொலைபேசிகள் மற்றும் கணினிகளுக்கு அடிமையாதலைக் குறைக்க நம்மை நாமே தயார் படுத்திக் கொள்ள முடியும்.

ஸ்மார்ட்போன்களிலிருந்து வரும் அறிவிப்புகள் மற்றும் அதிர்வுகளே நம் உள்ளுணர்வைத் தூண்டுகின்றன. எனவே, அதை நிறுத்தி வைத்துவிட்டு, தேவைப்படும் சமயங்களில் உபயோகப்படுத்தினால் நம் வேளையில் நம்மால் கவனம் செலுத்த முடியும்.” இவ்வாறு பெப்பர் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon