மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 31 மா 2020

சிறப்புக் கட்டுரை: கர்நாடகாவில் லிங்காயத்து ஏன் தனி மதமானது?

சிறப்புக் கட்டுரை: கர்நாடகாவில் லிங்காயத்து ஏன் தனி மதமானது?

சேது ராமலிங்கம்

கடந்த மார்ச் 12ஆம் தேதியன்று கர்நாடக முதல்வர் சித்தராமையா நீதிபதி ஹெச்.என்.நாகமோகன்தாஸ் கமிட்டியின் பரிந்துரையான பசவண்ணாவைப் பின்பற்றும் லிங்காயத்துகளுக்குச் சிறுபான்மை மதத்தினர் அந்தஸ்து அளிக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். மேலும் அவர், கர்நாடகாவின் சிறுபான்மையினர் ஆணையச் சட்டத்தின் பிரிவு (2)ன் கீழ் லிங்காயத்துகள் மத சிறுபான்மையினராகக் கருதப்படுவார்கள் என்றும் கூறினார். இதைத் தொடர்ந்து மாநில அரசு இப்பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்புவதாகவும் அதன் பின்னர் முறைப்படி மத்திய அரசு தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்குப் பரிந்துரைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மக்களில் ஒரு பிரிவினருக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து அளிப்பதற்கு ஏகப்பட்ட சட்ட விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். இந்த விதிமுறைகள் அனைத்தும் மத்திய அரசின் தீவிர பரிசீலனைக்குப் பின்னரே கடைப்பிடிக்கப்படும். இந்த நிலையில், தற்போது மத்திய அரசுக்குக் கர்நாடக அரசு தனது பரிந்துரையை அனுப்பி வைத்துள்ளது.

சரி, லிங்காயத்துகள் ஏன் தனி மதமாக விரும்பினர்? ஏன் கர்நாடக அரசு திடீரென்று ஏன் லிங்காயத்துகளுக்கு ஆதரவாகப் பரிந்துரைக்கிறது?

12ஆம் நூற்றாண்டில் பசவண்ணா என்ற சீர்திருத்தவாதி உருவாக்கியதே லிங்காயத்து என்ற புதிய தர்மம். பசவண்ணா 1131ஆம் ஆண்டில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் பசவேஸ்வரய்யா. பின்னர் இவர் வேதங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராணங்கள் ஆகியவற்றை ஆழமாகக் கற்கிறார். சம்ஸ்கிருதத்தையும் கன்னடத்தையும் கற்று சரளமாகப் பாடல்கள் கவிதைகள் எழுதும் அளவுக்குத் தேர்ச்சி பெறுகிறார்.

இவர் உருவாக்கிய லிங்காயத்து தர்மம் சனாதன இந்து மதத்தை எதிர்த்து கலகம் செய்து உருவானதாகும். இந்து மதத்தின் பிரிக்க முடியாத அம்சங்களான வர்ணாசிரமம் (வருண தர்மம்) அதனடிப்படையிலான சாதியக் கட்டமைப்பு, வேதங்கள், சடங்குகள், உருவ வழிபாடு மற்றும் கோயில் மையப்படுத்திய வழிபாடு ஆகியவற்றை பசவண்ணா ஏற்றுக் கொள்ளவில்லை.

கடவுளின் பெயரால் பார்ப்பனர் அல்லாதவர்கள் சுரண்டப்படுவதை அவர் எதிர்த்தார். சமூக சமத்துவம் குறித்து இடைவிடாது போதித்து வந்தார். அவருடைய சீடர்களை சரணாஸ் அதாவது நல அரசின் குடிமக்கள் என்றே அழைப்பார். பசவண்ணா, அனுபவ மண்டபம் என்ற மடத்தை உருவாக்குகிறார். அங்கு இவரது சீடர்கள் சமூகப் பொருளாதார பிரச்சினைகளை விவாதிப்பதற்காகவே கூடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்த விவாதங்களின் தொகுப்பே பாடல்களாகவும் உருவாகின.

பசவண்ணா வாச்சனாஸ் (பாடல்களை) எழுதினார். இந்தப் பாடல்களை கன்னடத்தில்தான் எழுதினார். சம்ஸ்கிருதத்தில் அல்ல. இந்தப் பாடல்கள் இவருடைய சீர்திருத்தச் சிந்தாந்தத்தைப் பறைசாற்றின.

லிங்காயத்துகள் உருவமற்ற இஷ்டலிங்கா என்ற கல்லை வழிபடுகிறார்கள். இந்த இஷ்டலிங்கத்தை அணிவது லிங்காயத்துகள் மத்தியில் ஒரு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. மூன்று வயதிலிருந்து எட்டு வயதுக்குள் ஒவ்வொரு லிங்காயத்து குழந்தைக்கும் இது அணிவிக்கப்படுகிறது.

லிங்காயத்துகள் சாதியற்ற சமூகத்தில் நம்பிக்கைக்கொண்டுள்ளனர். அவர்கள் புலால் உணவைத் தவிர்ப்பவர்கள். லிங்காயத்துகள் பசவண்ணாவின் கொள்கைகளான ‘காயகா’ என்பதையும் ‘தாஷோ’ என்பதையும் கடைப்பிடிக்கின்றனர். இதில் ‘காயகா’ என்றால் உடலின் மூலமாகவே ஆத்மாவை விடுலை செய்ய முடியும் என்பதாகும். ‘தாஷோ’ என்றால் சமூகத்தை உயர்த்திட சுயநலமற்ற சேவை புரிவது என்பதாகும் அவர்களின் மயானச் சடங்குகளும் வித்தியாசமானவை. இறந்துபோன லிங்காயத்துகளை அவர்களின் இடது கையில் இஷ்டலிங்கத்தை வைத்து தியான நிலையில்தான் புதைப்பார்கள். கர்நாடகாவில் மொத்தம் 1100 லிங்காயத்துகளின் மடங்கள் உள்ளன.

கர்நாடகாவிலுள்ள இன்னொரு பிரிவாக வீரசைவத்தினா் உள்ளனா். வீரசைவத்தைத் தோற்றுவித்தது பஞ்சாச்சாரியார்கள் ஆவர். இவர்கள் சிவலிங்கத்தின் மறு அவதாரங்களாக உருவானதாகக் கூறப்படுகின்றனர்.

வீரசைவம் என்பது இந்து மதமே. இதில் இந்து மதத்தைப் போன்றே சைவம் மற்றும் வைஷ்ணவம் என்ற இரு பிரிவுகள் உள்ளன. இதன் அடிப்படையாகவே சனாதன தர்மம் உள்ளது. வீரசைவம் இந்து தர்மங்கள், வேதங்கள், சாதி மற்றும் பாலினப் பாகுபாடுகள் ஆகிய அனைத்தையும் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துகிறது. இதனால் இதன் எதிர் துருவமாக இருந்துவந்த லிங்காயத்துகளுடன் இயற்கையாகவே முரண்பாடுகள் இருந்து வந்தன.

ஆனால், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வீரசைவத்தைச் சேர்ந்த ஹங்கல் என்ற மடத்தின் தலைமை அனைத்திந்திய வீரசைவ மகாசபை என்ற அமைப்பை உருவாக்கி, அது அனைத்து லிங்காயத்துகளுக்கும் வீரசைவர்களுக்கும் தலைமை தாங்கும் என்று அறிவித்தது. பின்னர் 36 ஆண்டுகள் கழித்து 1904இல் அதே மகாசபை லிங்காயத்துகளும் வீரசைவர்களும் இந்துக்கள்தான் என்ற தீர்மானத்தை இயற்றியது. ஆனால் இதை லிங்காயத்துகள் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். இந்தக் குழப்பங்கள் நீடித்தன. ஏனெனில் லிங்காயத்துகளுக்குத் தனியாக எழுதப்பட்ட வரலாறு கிடையாது. அவர்களுக்கான ஆதாரங்கள் வாச்சனாஸில்தான் உள்ளன.

ஆனால், 12ஆம் நூற்றாண்டிலேயே லிங்காயத்துகளின் வாச்சனாஸ் எனப்படும் பாடல்கள் கர்நாடகாவின் பல பகுதிகளுக்கும் மகாராஷ்ரா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அவற்றில் பல தொலைந்து போயின.

இதனால் லிங்காயத்துகள் இந்துகள் என்பதை மறுப்பதற்கான ஆதாரங்கள் இல்லாமல் போனது. பின்னர் 1880-1964 வரை பக்கிரப்பா குருபசப்பா ஹலகாட் என்பவரின் தொடர் முயற்சிகளால் 22,000 வாச்சனாஸ்கள் கிடைத்தன. இவையும் பனை ஓலைகளில் எழுதப்பட்டவை. பல்வேறு கிராமங்களிலும் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இவை கிடைத்தன.

இந்த வாச்சனாஸ்களை கடந்த 20 ஆண்டுகளாகக் கடுமையாக ஆய்வு செய்து எம்.எம்.கல்புர்கி, வீரண்ணா ரசூர், டி.ஆர்.சந்திர சேகர் ஆகிய ஆய்வாளர்கள் லிங்காயத்துகள் இந்துகள் அல்ல என்று நிரூபித்தனர். (இதற்காகவே கல்புர்கியும் இந்த ஆய்வுகளைத் தொடர்ச்சியாக வெளியிட்டதால் பத்திரிகையாளர் கவுரி லங்கேஸும் கொல்லப்பட்டனர்.) இந்த ஆய்வுகள் கர்நாடகாவில் இன்று வரை புகழ்பெற்ற அறிவுப் பெட்டகமாக விளங்குகின்றன. ஆனால், இன்னொருபக்கம் அவை பாஜகவின் ஓட்டு வங்கியாக இதுவரை இருந்து வந்த லிங்காயத்துகளைக் கலைத்தன என்பதால் அந்தக் கட்சியின் கோபத்துக்கும் ஆய்வாளர்கள் இலக்கானார்கள் என்பது பல முறை நிரூபிக்கப்பட்ட வரலாறு.

எனவே, இதைத்தொடர்ந்து லிங்காயத்துகள் தாங்கள் தனி மதமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று பல மாநாடுகள் பேரணிகளை நடத்தி அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து இதுவரை ஓட்டு வங்கியாக இருந்து வந்த லிங்காயத்துகளை நடைபெறவுள்ள தேர்தலையொட்டி தங்களது பக்கம் இழுக்க ஒரு ராஜதந்திரமாகக் கர்நாடக காங்கிரஸ் கட்சி அவர்களை மத சிறுபான்மையினர் அந்தஸ்து அளிக்க ஒப்புக்கொண்டது.

இதுதான் லிங்காயத்துகளைத் தனி மதமாகக் கர்நாடக காங்கிரஸ் அரசு ஏற்றுக்கொள்வதற்கான பின்னணியாகும். ஆனால், இதை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon