மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 21 அக் 2020

வாராக் கடன் சாபத்தில் வங்கிகள்!

வாராக் கடன் சாபத்தில் வங்கிகள்!

கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் கடன் மோசடியால் இந்திய வங்கிகளின் வாராக் கடன் அளவு ஜனவரி - மார்ச் காலாண்டில் ரூ.8,000 கோடி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செயற்படா சொத்து அல்லது வாராக் கடன் என்பது இந்திய வங்கிகளின் தீராத சாபமாக மாறியுள்ளது. 2017ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் வரையில் இந்திய வங்கிகளின் வாராக் கடன் அளவு ரூ.8,40,958 கோடியாக இருந்தது. தொழில் துறை, சேவைகள் துறை மற்றும் வேளாண் துறைக்கு வழங்கப்பட்ட கடன்கள் பெருமளவில் வாராக் கடன்களாக மாறியுள்ளன. சமீபத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,700 கோடி மோசடி செய்த வழக்கில் சிக்கிய நீரவ் மோடியின் உறவினரான மெஹுல் சோச்கிக்குச் சொந்தமான கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம் சார்பாகவும் கோடிக்கணக்கில் கடன் பெறப்பட்டுள்ளது. மெஹுல் சோக்சி மற்றும் நீரவ் மோடி ஆகிய இருவருக்கும் ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை வழங்கி மும்பை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கீதாஞ்சலி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட செயல்பாட்டு மூலதனக் கடன்களைப் பரிசீலிக்க 2015ஆம் ஆண்டில் கூட்டு கடன் வழங்கல் மையம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு தனது நடவடிக்கையைத் தொடங்கிய பிறகு 60 நாள்களுக்கும் மேலாகக் கீதாஞ்சலி நிறுவனம் தனது கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான எவ்வித முயற்சியிலும் ஈடுபடவே இல்லை. அதன் பின்னர் இந்நிறுவனம் தனது மூன்று கிளை நிறுவனங்களை ஒன்றிணைத்து வருவாயை உயர்த்தவும் செலவுகளைக் குறைக்கவும் முயற்சிப்பதாகத் தெரிவித்தது. எனினும் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் இந்நிறுவனம் தோல்வியுற்றதால் வருமான வரித் துறை, சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் கைகளில் சிக்கியது. முடிவில் சென்ற ஜனவரி மாதத்தில் நீரவ் மோடியுடன் இணைந்து மிகப் பெரிய நிதி மோசடியில் ஈடுபட்டதும் வெளிச்சத்துக்கு வந்தது. கீதாஞ்சலி நிறுவனத்தால் வங்கிகளின் வாராக் கடன் ரூ.8,000 கோடி அதிகரித்தது மட்டுமே மிச்சம்.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது