மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 30 மே 2020

டிஜிட்டல் திண்ணை: பேராசிரியை டூ கவர்னர் மாளிகை - காவல் துறைக்கு முதல்வர் போட்ட உத்தரவு!

டிஜிட்டல் திண்ணை: பேராசிரியை டூ கவர்னர் மாளிகை - காவல் துறைக்கு முதல்வர் போட்ட உத்தரவு!

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. தயாராக வைத்திருந்த ஸ்டேட்டஸுக்குப் போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக்.

“காவிரிக்காகத் தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில் தமிழகத்துக்கு வந்துவிட்டுப் போனார் பிரதமர் மோடி. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாகத் தமிழகத்தில் அவர் வாய் திறக்காமல் திரும்பிவிட்டார். இந்தச் சூழ்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த மிக முக்கியமான பிஜேபி பிரமுகர் ஒருவர் டெல்லியில் பாஜக தலைவர் ஒருவரைச் சந்தித்திருக்கிறார். ‘பிரதமர் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாகத் தமிழ்நாட்டில் எதுவுமே பேசவில்லை என்பதுதான் அங்கே சர்ச்சையாகியிருக்கிறது...’ என்று சொன்னாராம். அதற்கு டெல்லி தலைவர், ‘யாரு என்ன கத்தினாலும், என்ன போராட்டம் நடத்தினாலும் எதுவும் நடக்காது. கர்நாடகத் தேர்தல் முடியட்டும். கர்நாடகாவில் தேர்தல் முடிவு எப்படி வருதுன்னு பார்க்கலாம். அங்கே நம்ம ஆட்சி வந்துட்டா, நிச்சயமாக மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது. நாம எல்லோரையும் அனுசரிச்சுத்தான் போகணும். ஓட்டுப்போட்ட கர்நாடகாவை நாம மதிச்சுத்தான் ஆகணும். காவிரி மேலாண்மை வாரியம் அமைச்சா, கர்நாடக மக்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டியிருக்கும். ஒருவேளை அங்கே மறுபடியும் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் சூழ்நிலை உருவானால், மேலாண்மை வாரியத்தை உடனே அமைச்சுடலாம். அப்படி அமைச்சா கர்நாடகாவில் பிரச்சினை வரும். கன்னட அமைப்புகள் அரசுக்கு எதிராகப் போராடும். அதை அவங்க சமாளிச்சுக்கட்டும்.

அதுக்குப் பிறகு, ‘ஓட்டுப்போட்ட மக்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டது என்ற எண்ணம் மக்கள் மனதில் வந்துவிடும். அது நமக்கு நாடாளுமன்றத் தேர்தலில் சாதமாக இருக்கும். அதே நேரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைச்சது தமிழ்நாட்டுல நமக்கு நல்ல பெயரை வாங்கித் தரும். அதனால், எதுவாக இருந்தாலும், கர்நாடகத் தேர்தல் முடிஞ்ச பிறகுதான் ஒரு முடிவுக்கு வரவே முடியும். அதுவரை என்ன போராட்டம் நடத்தினாலும் இங்கே யாரும் எதுவும் பேசுற நிலையில் இல்லை..’ என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டாராம். இதில் ஒரு கூடுதல் தகவல் என்ன தெரியுமா? இந்தச் சந்திப்பு நிகழ்ந்தபோது, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் உடன் இருந்தாராம். அவரும் டெல்லி தலைவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டு அமைதியாகவே இருந்தாராம்” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ். அதற்கு லைக் போட்டதுடன், அப்படியே காப்பி செய்து ஷேரும் செய்தது வாட்ஸ் அப்.

தொடர்ந்து மெசேஜ் ஒன்றையும் டைப்பிங் செய்ய ஆரம்பித்தது வாட்ஸ் அப். “அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியை மாணவிகள் சிலருடன் போனில் பேசிய உரையாடல் நேற்றிலிருந்து என் வழியாக ஊரெல்லாம் சுற்றிவருகிறது. அந்தப் பேராசிரியை மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துவிட்டது. அவரிடம் காவல் துறை உயரதிகாரி ஒருவர் நேற்று இரவு விசாரணை நடத்தியிருக்கிறார். அப்போது, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உயர் பொறுப்பிலிருக்கும் ஒருவருடைய பெயரைச் சொல்லியிருக்கிறார் அந்தப் பேராசிரியை. அவர் சொன்ன நபருடன் காவல் துறை அதிகாரி போனில் பேசினாராம். அவரோ, ‘சார் இப்போ எதுக்கு இதெல்லாம் விசாரிக்கிறீங்க? உங்க கிட்ட யாரு புகார் கொடுத்தாங்க? நீங்க சார்கிட்ட பேசுங்க... இல்லைன்னா அவரை உங்களோடு பேசச் சொல்றேன்’ என கவர்னர் மாளிகையோடு தொடர்பில் இருக்கும் ஒருவரின் பெயரைச் சொல்லியிருக்கிறார். எதற்கு வம்பு என போனை வைத்துவிட்டாராம் காவல் துறை அதிகாரி. உடனே இந்தத் தகவலைச் சென்னையிலிருக்கும் உயரதிகாரிகளுக்குச் சொல்லியிருக்கிறார். அவர்களோ, ‘வெய்ட் பண்ணுங்க.. கேட்டுட்டு சொல்றோம்’ எனச் சொல்லியிருக்கிறார்கள்.

இன்று காலை இது தொடர்பாக முதல்வரிடம் பேசியிருக்கிறார்கள். ‘யாரா இருந்தால் என்ன? இதை எப்படி நாம ஆதரிக்க முடியும்? சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கணுமோ எடுங்க. என்ன வந்தாலும் பார்த்துக்கலாம்?’ என்று சொல்லிவிட்டாராம். அதன் பிறகு சென்னையிலிருந்து கிரீன் சிக்னல் காட்டியிருக்கிறது போலீஸ். உடனடியாக அந்தப் பேராசிரியை மீது வழக்குப் பதிவு செய்துவிட்டார்கள். பேராசிரியை வாக்குமூலத்தை வாங்கிய பிறகு தேவைப்பட்டால், பல்கலைக் கழகத்தில் உள்ளவர்கள் தொடங்கி அடுத்தடுத்தவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ய முடிவெடுத்திருக்கிறதாம் போலீஸ்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.

திங்கள், 16 ஏப் 2018

அடுத்ததுchevronRight icon