மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 21 செப் 2020

கத்துவா வழக்கு: சிறுமி குடும்பத்துக்குப் பாதுகாப்பு!

கத்துவா வழக்கு: சிறுமி குடும்பத்துக்குப் பாதுகாப்பு!

கத்துவா சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது குடும்பத்துக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவை உலுக்கிய இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக இன்று விசாரணை தொடங்கியது. இவ்வழக்கில் தொடர்படைய 8 குற்றவாளிகளும் இன்று கத்துவா அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

இதில் குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அன்கூர் சர்மா, எங்கள் தரப்பில் நார்கோ டெஸ்ட் எடுக்கத் தயார் என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அப்போது நீதிபதிகள் முன்னர் ஆஜரான முக்கிய குற்றவாளியான ஓய்வு பெற்ற வருவாய்த் துறை அதிகாரி சஞ்சி ராம் (60), தனக்கும் இந்தக் கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார். உண்மை கண்டறியும் சோதனை நடத்தி இந்தக் கொலையின் உண்மைத் தன்மையைத் தெரிந்துகொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். இதை விசாரித்த நீதிமன்றம் விசாரணையை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதற்கிடையே தனக்குக் கொலை மிரட்டல் வருவதாகச் சிறுமி தரப்பு வழக்கறிஞர் தீபிகா சிங் பேட்டி அளித்திருந்தார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜம்மு காஷ்மீரில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றால் தங்களுக்கு நீதி கிடைக்காது என்றும், சண்டிகருக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்றும் தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதால் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 16) 2 மணியளவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறுமியின் குடும்பத்தினர், அவர் தரப்பு வழக்கறிஞர் தீபிகா சிங் உள்ளிட்டோருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஜம்மு காஷ்மீா் மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் இந்த வழக்கை சண்டிகர் மாநிலத்துக்கு மாற்றம் செய்வது தொடர்பாக மாநில அரசு 27ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

காவல் துறையினரே முறையாக விசாரித்துவருவதால் வழக்கை சிபிஐக்கு மாற்றத் தேவையில்லை; ஒருவேளை காவல் துறை விசாரணையில் தொய்வு ஏற்பட்டால் சிபிஐக்கு மாற்றலாம் என்று கருத்து தெரிவித்து வழக்கை 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon