மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 7 ஜூலை 2020

மீண்டும் திரையில் விஜயகாந்த்

மீண்டும் திரையில் விஜயகாந்த்

கலைத் துறைக்கு வந்து 40 ஆண்டுகள் ஆனதையொட்டி, நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு நேற்று (ஏப்ரல் 15) காஞ்சிபுரத்தில் பாராட்டுவிழா நடத்தப்பட்டது. இதில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், விரைவில் சினிமாவில் விஜயகாந்த் நடிப்பார் என்று குறிப்பிட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகேயுள்ள கரசங்கால் பகுதியில் நேற்று (ஏப்ரல் 15) அம்மாவட்ட தேமுதிக சார்பில் சாதனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் 40 ஆண்டு காலத் திரைப் பயணச் சாதனையையொட்டி இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் கலந்துகொள்வதற்காகக் காலை 11.00 மணிக்கே வீட்டிலிருந்து புறப்பட்டார் விஜயகாந்த். வழி நெடுக ரசிகர்களும் கட்சியினரும், அவருக்கு வரவேற்பு கொடுத்து அசத்தினர். மதியம்

1.00 மணியளவில் மாநாட்டு மேடைக்கு வந்த விஜயகாந்த், அங்கு கொடி ஏற்றினார். அதன் பின், விடுதியில் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார். மாலை 6.30 மணிக்கு விஜயகாந்த் டெம்போ டிராவலரில் மாநாட்டு மேடைக்கு வந்தார், அவரைத் தொடர்ந்து லேன்ட் ரோவர் காரில் விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷ் மற்றும் அவரது மனைவி, பிரேமலதா மற்றும் அவரது மகன் விஜய் பிரபாகரன் ஆகியோர் வந்தனர்.

இந்த விழாவில் நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், நாசர், மனோபாலா, ஏ.வி.எம்.சரவணன், கலைப்புலி தாணு, நடிகை அம்பிகா, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.கே.செல்வமணி, பேரரசு உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித்தலைவருமான சரத்குமார், அரசியலில் வெவ்வேறு பாதைகளில் சென்றபோதும் விஜயகாந்துடன் மேடையில் பேசுவதற்காகத் தான் காத்திருந்ததாகக் கூறினார். ”தயாரிப்பாளராக நான் நஷ்டமடைந்தபோது, தனது படத்தில் வில்லனாக என்னை நடிக்க வைத்தவர் விஜயகாந்த். இந்த வாழ்க்கை அவர் தந்ததுதான். அது மட்டுமல்லாமல், அந்தப் படம் முடிவடைந்தபோது என்னை விட உனக்கு நல்ல பெயர் கிடைக்குமென்று சொன்னார். வேறு எந்தக் கதாநாயகனும் இவ்வாறு சொல்ல மாட்டார். சில இயக்குனர்கள் கதை சொல்லும்போதும்கூட, இந்த பாத்திரம் உங்களுக்கு நன்றாக இருக்கும் என்று என்னை அழைத்துச் சொல்வார்” என்று பேசினார் சரத்குமார். விஜயகாந்த் பற்றிய மீம்ஸ்களை தான் பார்ப்பதில்லை என்று கூறினார். மேலும், தங்களது கட்சிகள் எதிர்காலத்தில் கூட்டணி அமைக்கவும் வாய்ப்புண்டு என்று சூசகமாகக் குறிப்பிட்டார்.

தனித்தனியாகப் பிரிந்து கிடந்த நடிகர்களை ஒருங்கிணைத்து, நடிகர் சங்கத்தை மீட்டெடுத்தவர் விஜயகாந்த் எனக் கூறினார் நடிகர் சங்கத் தலைவரான நாசர்.

நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், விஜயகாந்தின் சாதனைகளையும் அரசியல் பயணத்தையும் பற்றிப் பேசினார். விஜயகாந்தின் பண்புகள் பற்றி, சில உதாரணங்களுடன் குறிப்பிட்டார்.

“நான் (சந்திரசேகர்) கேப்டனைத் தொடர்புகொண்டு, தம்பி விஜய் உங்களை 5 நிமிடம் சந்திக்க வேண்டும் என்று விருப்பப்படுகிறார் என்று சொன்னேன். உடனே, அவர் சரி என்றார். நான் குளிக்கச் சென்றேன் அதற்கடுத்த மூன்று நிமிடத்தில், அவர் எங்கள் வீட்டுக்கு வந்துட்டார். அப்போது, விஜய் சினிமாவில் நடிக்க ஆசைப்படுகிறார்; அதுவும் உங்களுடன் நடிக்க வேண்டும் என்று விருப்பப்படுகிறார் என்று கூறினேன். அதற்கு, உடனடியாக அந்த வேலைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்றார். பணம் பற்றி பிறகு பேசிக்கொள்ளலாம் என்று கூறினார். அந்தப் படம்தான் செந்தூரப்பாண்டி. அதில், விஜயகாந்துக்குத் தம்பியாக விஜய் நடித்திருப்பார்” என்று கூறினார்.

விஜயகாந்த் தன்னிடம் பணியாற்றியவர்களுக்கு எத்தகைய மரியாதையை அளிப்பார் என்று பேசினார் இயக்குனர் செல்வமணி. கூட்டத்துக்கு வந்தவர்கள் அனைவரும் விஜயகாந்தின் பண்புகளில் 10 சதவீதத்தையாவது பின்பற்ற வேண்டுமெனக் கூறினார். மேலும், விஜயகாந்தின் கால்ஷீட்டை அளித்தால் அவரை வைத்துப் புதிய படம் இயக்குவதற்குத் தயார் என்று பிரேமலதா விஜயகாந்திடம் வேண்டுகோள் வைத்தார். இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு ஆகியோரும் இதே கருத்தை நேற்று மேடையில் தெரிவித்தனர்.

விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துப் பேசினார் பிரேமலதா விஜயகாந்த். விஜயகாந்தின் உதவியாளர்கள், காஸ்ட்யூமர் உட்பட அவரது சினிமா வளர்ச்சியில் பங்குகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். குறிப்பாக, தயாரிப்பாளர் அ.செ.இப்ராஹிம் ராவுத்தரின் நட்புதான் விஜயகாந்தை வளர்த்ததாகக் குறிப்பிட்டார். தேமுதிக தொண்டர்களே விஜயகாந்தின் இந்த வெற்றிக்குக் காரணம் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய பிரேமலதா, “சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற வெறி, இப்போதும் விஜயகாந்திடம் உண்டு. உறுதியாக, விஜயகாந்தின் கால்ஷீட் இயக்குனர்கள் செல்வமணி, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் தயாரிப்பாளர் தாணுவுக்கு வழங்கப்படும். கலைத் துறையை வாழவைப்பதில் விஜயகாந்த் உறுதுணையாக இருப்பார். உங்களால் தீர்க்க முடியாத பிரச்சினைகளை, அவர் தீர்த்து வைப்பார்” என்று தெரிவித்தார்.

நெடுநேரம் நடந்த இந்த நிகழ்ச்சியின் முடிவில், நாற்காலியில் அமர்ந்தவாறே பேசினார் விஜயகாந்த். ”நான் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், நான் எதுவும் பேசவில்லை. எனக்குப் பதிலாக, எனது படை நிறைய விஷயங்கள் பேசிவிட்டது. வந்தவர்கள் எல்லோரும் பேசுவதைக் கேட்பதற்காகத்தான், நானும் வந்திருக்கிறேன்.

கலைத் துறையைச் சார்ந்த எல்லோரையும் வாழ வைப்பேன். ஏனென்றால், நான் கலைத் துறையில் இருந்துதான் வந்திருக்கிறேன். கலைத் துறை சார்ந்த எந்தப் பிரச்சினை என்றாலும் முன் நின்று தீர்ப்பேன்” என்று பேசினார் விஜயகாந்த்.

மாநாட்டுக்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த விஜயகாந்த், அனைவரும் பத்திரமாக வீடு போய்ச் சேர வேண்டுமென்று கூறினார்.

முன்னதாக, திரையுலகப் பிரபலங்கள் வரும் வரை விழா மேடையில் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் ஆகியன நடத்தப்பட்டன.

இந்த விழாவுக்கு வருகை தந்தவர்களுக்கு நன்றி தெரிவித்து, இன்று (ஏப்ரல் 16) தேமுதிக தலைவர் விஜயகாந்த் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. விஜயகாந்தின் சாதனையை தொலைபேசி, இணையம் வழியாகப் பாராட்டியவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon