மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 19 பிப் 2020

பேராசிரியை கைது!

பேராசிரியை கைது!

அருப்புக்கோட்டையில் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த கல்லூரி பேராசிரியை நிர்மலா மீது இரு பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் கீழ் தேவாங்கர் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் கணிதத் துறை பேராசிரியையாக பி.நிர்மலா தேவி (48) பணிபுரிந்து வருகிறார்.

பேராசிரியையாக 15 ஆண்டுகளாகப் பணியாற்றும் இவர் கல்லூரியில் பயிலும் மாணவிகளை கடந்த மாதம் 15ஆம் தேதி செல்பேசியில் தொடர்புகொண்டு, பாலியல் தொழிலுக்கு அழைத்துள்ளார். அது வாட்ஸ் அப்பில் ஆடியோவாக வெளியாகியது.

மாணவிகள் தங்களுக்கு விருப்பமில்லை என மறுப்பு தெரிவித்த பின்னரும் விடாமல் அவர்களை நிர்ப்பந்தப்படுத்தும் வகையில் பேராசிரியை பேசியுள்ளார். இந்த சம்பவம் குறித்து மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரை கல்லூரி நிர்வாகம் கிடப்பில் போட்ட நிலையில், பேராசிரியை பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியதால், கல்லூரி நிர்வாகம் பேராசிரியை நிர்மலாவை 15 நாட்கள் பணியிடை இடைநீக்கம் செய்தது.

அவரிடம் விசாரணை நடத்தியபோது, மாணவிகளிடம் பேசியதை ஒப்புக்கொண்டார். ஆனால் ,தான் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதாக விளக்கம் அளித்தார். மேலும், கல்லூரி நிர்வாகத்தினர் என்னை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். என் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு குறித்த எந்த ஆதாரமும் கொடுக்கவில்லை. என்னை இடைநீக்கம் செய்ததைக் குறித்து விசாரிக்கச் சென்றதற்கு நிர்வாக குழுவை கூட்டி, பதில் கூறுவதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது. ஆனால், இதுவரை நிர்வாகக் குழுவை கூட்டவில்லை.

ஏற்கனவே, நிர்வாகத்திற்குள் பல பிரச்சினைகள் உள்ளன. அந்த ஆடியோ நான் பேசியதுதான். மாணவிகள் தவறுதலாக புரிந்து கொண்டனர். கல்லூரி நிர்வாகம் வீட்டில் இருக்க சொல்லி ஆர்டர் கொடுத்துள்ளது. அதனால், நான் வீட்டில் இருக்கிறேன். என்னைத் தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் தகவல் பரப்புகின்றனர். அதற்கு எதிராகத் தக்க நடவடிக்கை எடுப்பேன்” எனக் கூறினார்.

இந்நிலையில், பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள், மாதர் சங்கத்தினர், இந்திய மாணவர் சங்க அமைப்பினரும் இணைந்து தேவாங்கர் கல்லூரி முன்பாக இன்று காலை போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து, கல்லூரிக்குச் சென்ற வட்டாட்சியர், ஏடிஎஸ்பி மதி, டிஎஸ்பி தனபால் உள்ளிட்டோர் பேராசிரியை மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விசாரணை நடத்தினர். அதன் பின்னர் கல்லூரி முதல்வர் பேராசிரியை நிர்மலா தேவி மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

ஏடிஎஸ்பி மதி தலைமையிலான போலீஸார் அருப்புக்கோட்டையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி வீட்டிற்குச் சென்றனர். ஆனால், வீட்டுக்குள் இருந்து வெளியே வர அவர் மறுத்துவிட்டார். இதனால் போலீஸார் நிர்மலா தேவியின் உறவினர் ஒருவரைத் தொடர்பு கொண்டு அங்கு வருமாறு அழைத்தனர். தற்போது நிர்மலா தேவி வீடு முன்பு போலீஸார் காத்திருந்தனர். தற்போது வீட்டின் கதவை உடைத்து அவரை கைது செய்தனர்.

கல்லூரியின் செயலாளர் ராமசாமி, “பேராசிரியை நிர்மலா மாணவிகளிடம் பேசியது குறித்து 3 மூத்த பேராசிரியர்களை கொண்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை அறிக்கை என்னிடம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நிர்மலா தேவி தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குற்றச்சாட்டு குறித்து நிர்மலாதேவி பதில் அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளோம். அவர் பதில் அளித்தவுடன் கல்லூரி அளவில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் நலன் பாதுகாக்கப்படும் அளவுக்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

துணைவேந்தர் செல்லத்துரை, சிண்டிகேட் உறுப்பினர் திவாகர் 5 பேரைக் கொண்ட விசாரணைக் குழுவை கல்லூரி நிர்வாகம் அமைத்துள்ளது.

இதற்கிடையே ,மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த பேராசிரியை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், உயர்கல்வித் துறை அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மதுரை கல்லூரி முன்னாள் முதல்வர் முரளி தமிழக ஆளுநருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார், “மாணவிகளிடம் பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோவை நானும் கேட்டேன். பேராசிரியையின் பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கருப்பு ஆடுகள் களையெடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon