மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 19 பிப் 2020

வெப் சீரீஸாகும் 'சிகப்பு ரோஜாக்கள்' !

வெப் சீரீஸாகும் 'சிகப்பு ரோஜாக்கள்' !

நடிகர் மனோஜ் கே.பாரதி இயக்கத்தில் சிகப்பு ரோஜாக்கள் இரண்டாம் பாகம் தற்போது வெப் சீரீஸாக உருவாகவுள்ளது.

1978ஆம் ஆண்டு கமல் - ஸ்ரீதேவி நடிப்பில் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த படம் 'சிகப்பு ரோஜாக்கள்’.கே.பாக்யராஜ் கதை, வசனத்தில் உருவானது. இந்தப் படம் க்ரைம் த்ரில்லராக உருவாகி அப்போது வெள்ளி விழாக் கொண்டாடியது.

தற்போது 40 வருடங்களுக்குப் பிறகு 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இந்தப் படத்தை இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் கே.பாரதி இயக்க இருக்கிறார்.

'தாஜ் மஹால்' படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமான நடிகர் மனோஜ் கே.பாரதி, 'கடல் பூக்கள்', 'சமுத்திரம்', 'அன்னக்கொடியும் கொடி வீரனும்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்குத் திரைத் துறையில் சோபிக்காத மனோஜ் படம் இயக்கும் முயற்சியில் இறங்கினார். இவர் ஏற்கனவே இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். அதனால் சில வருடங்களுக்கு முன்பு, 'சிகப்பு ரோஜாக்கள்' இரண்டாம் பாகத்தின் கதையை உருவாக்கி, அந்தப் படத்தின் வாயிலாக இயக்குநராக அறிமுகமாகப்போவதாக அறிவித்தார். ஆனால் அந்த முயற்சி கை கொடுக்கவில்லை. தற்போது அவர், தந்தை பாரதிராஜா துவங்கிய சினிமா கல்லூரியில் நடிப்பு சம்பந்தமான பாடம் எடுத்துவருகிறார்.

இந்நிலையில்,‘சிவப்பு ரோஜாக்கள்’ படத்துக்காக எழுதப்பட்ட அந்த ஸ்கிரிப்ட்டை வெப் சீரீஸாக இயக்க முடிவுசெய்துள்ளார் மனோஜ் கே.பாரதி. இதில் பாரதிராஜாவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon