மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 19 பிப் 2020

போராட்டங்கள் தொடரும்!

போராட்டங்கள் தொடரும்!

உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கின்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய ஸ்டாலின் , “சமூக நீதிக்கான போராட்டங்கள் தொடரும்” என்றும் தெரிவித்தார்.

எஸ்.சி/எஸ்.டி சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் .தாழ்த்தப்பட்ட, மலைவாழ் பழங்குடி மக்களுக்கு உரியப் பாதுகாப்பினை வழங்கிட வலியுறுத்தியும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்தின் 9வது அட்டவணையில் இணைக்க வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில், “சமூகநீதிக்காகவும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதற்காகவும், அரசியல் சட்டத்தின் நோக்கத்தைப் பட்டுப்போகாமல் தடுத்து நிறுத்துவதற்கும் நாம் நடத்திக் கொண்டிருக்கும் போராட்டக்களமாக இருக்கும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரையில், நாம் பெருமையோடு சொல்ல வேண்டுமென்றால், தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த நேரத்தில் அனைத்துச் சாதிகளை சேர்ந்தவர்களும் ஆலயங்களுக்குள் நுழையலாம், அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை கொண்டு வந்தார். அவர் முதல்வராக இருந்தபோதுதான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 16% லிருந்து 18% ஆக உயர்த்தப்பட்டதும் தலைவர் கருணாநிதியின் ஆட்சியில் தான்.

இன்றைக்கு பாஜக ஆட்சி மத்திய அரசில் பொறுப்பேற்ற பிறகு, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மாநிலத்திலும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. இதுதான் மோடி தலைமையிலான மத்திய அரசின் மிகப்பெரிய சாதனையாக உள்ளது. தற்போது, உச்ச நீதிமன்றம் இப்படிப்பட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறது என்றால், அந்தத் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு ஒரு சீராய்வு மனுவை உடனடியாக தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், வட மாநிலங்களில் ஏற்பட்டிருக்கின்ற போராட்டங்களை எல்லாம் பார்த்த பிறகு, வேறு வழியின்றி சீராய்வு மனு தாக்கல் செய்ய மத்திய அரசு முன் வந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. உள்ளபடியே நமக்கு காவிரிப் பிரச்சினை மட்டும் இல்லையென்றால், இந்தத் தீர்ப்பு வந்தபோது இந்தத் தீர்ப்பு வெளியானதும் தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய கிளர்ச்சி ஏற்பட்டிருக்கும். காவிரிப் பிரச்சினையால், கொஞ்சம் காலதாமதமாக வியூகம் அமைத்து இந்தப் போராட்டத்தை தொடங்கி இருக்கிறோம்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒரு மிகப்பெரிய கொடுமையாக உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கின்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். அல்லது 9 வது அட்டவணையில் இதனை சேர்த்து, ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்க வேண்டும். இல்லையென்றால், இந்தப் போராட்டம் இன்றோடு முடியாமல், மேலும் தொடரும்” என்று தெரிவித்தார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது: ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நீதிபதியாக முடிகிறது என்றால் அதற்குக் காரணம் மதிப்பிற்குரிய தலைவர் கலைஞர் அவர்களே. மோடி என்ன நினைக்கிறாரோ அதுவே உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ராவின் தீர்ப்பாக இருக்கிறது என்று விமர்சித்தார்.

முத்தரசரன் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி: தமிழகத்தில் தொடர்ந்து காவிரி உரிமைக்காக மக்கள் பெருமளவில் போராடி வருகின்றனர். வைகோவின் மைத்துனர் தன் உயிரை மாய்த்திருக்கிறார், ஈரோட்டில் எந்தக் கட்சியையும் சாராத தர்மலிங்கம் காவிரிக்காக உயிர் நீத்திருக்கிறார் இப்படியாக மக்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்க எடப்பாடி அரசு மெளனம் காக்கிறது. திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் நடைபெற்ற போராட்டத்தில் 11 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் எஸ்.சி, எஸ்.டி சட்டத்தை நீர்த்துப் போகும் நிர்மூலமாக்கும் செயலை மத்திய அரசு செய்து வருகிறது என்று குற்றம் சாட்டினார்.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon