மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 19 பிப் 2020

நைட்கிளப் திறப்பு விழா சர்ச்சையில் எம்பி!

நைட்கிளப் திறப்பு விழா சர்ச்சையில் எம்பி!

உத்தரப் பிரதேசத்தில் நைட்கிளப் திறப்புவிழாவில் பாஜக எம்பி சாக்‌ஷி மகராஜ் கலந்துகொண்டது சர்ச்சையாகியுள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் பாஜக கட்சித்தலைவர் மீது அவர் புகார் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார் பாஜகவைச் சேர்ந்த சச்சிதானந்த் ஹரி சாக்‌ஷி என்ற சாக்‌ஷி மகராஜ். தனது பெயரில் கல்வி நிறுவனங்களையும் ஆசிரமங்களையும் இவர் நடத்தி வருகிறார்.

அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளை உதிர்ப்பது இவரது வழக்கம். 2015ஆம் ஆண்டில் நேபாள நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, தற்போது காங்கிரஸ் தலைவராக இருந்துவரும் ராகுல் காந்தி இறைச்சி உணவை உண்டுவிட்டு கேதார்நாத் கோவிலுக்குச் சென்றதே அதற்குக் காரணம் என்று கூறியவர். அதற்கு முன்பாக, முஸ்லிம் பெண்களைப்போல இந்துப்பெண்களும் குறைந்தது நான்கு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியவர் சாக்‌ஷி மகராஜ்.

ஆண் – பெண் ஒழுக்கம் தொடர்பாக தொடர்ச்சியாகக் கருத்துகள் கூறிவரும் இவர், தற்போது சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (ஏப்ரல் 15), அலிகஞ்ச் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இரவு விடுதியைத் திறந்து வைத்துள்ளார். இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக உ.பி. மாநில பாஜக தலைவர் மகேந்திரநாத் பாண்டேவிடம் புகார் தெரிவித்துள்ளார் மகராஜ். ”முன்னாள் உ.பி. பாஜக தலைவர் ரஜ்ஜன் சிங் சொல்லித்தான் அங்கு சென்றேன். அவரது மருமகன் புதிய ஹோட்டல் ஒன்றைக் கட்டியிருப்பதாகத்தான் என்னிடம் குறிப்பிட்டார். அங்கு சென்றபிறகுதான், அது ஒரு நைட்கிளப் என்று தெரிந்தது. அதற்கு முறையான உரிமம் பெற்றுள்ளனரா என்று, அவர்களிடம் விசாரித்தேன். நான் ஒரு எம்பி மட்டுமல்ல; ஒரு சாமியாரும் கூட. இந்த மாதிரியான விஷயங்களில் இருந்து நான் ஒதுங்கியிருக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உன்னாவ் தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் குல்தீப்சிங் செங்கர், சிறுமி கற்பழிப்பு வழக்கு மற்றும் அவரது தந்தையின் மர்ம மரணம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த பிரச்சினை ஓய்வதற்குள்ளாகவே, நைட்கிளப் சர்ச்சையில் சிக்கியுள்ளார் சாக்‌ஷி மகராஜ். கடந்த ஆண்டும், இதேபோல உ.பி.யை சேர்ந்த பாஜக அமைச்சர் ஸ்வாதி சிங் ஒரு பார் திறப்புவிழாவில் கலந்துகொண்டு சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon