மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

எய்ம்ஸில் வலம் வந்த வசூல்ராஜா!

எய்ம்ஸில் வலம் வந்த வசூல்ராஜா!

இந்தியாவின் மிக முக்கிய மருத்துமனைகளில் ஒன்றான எய்ம்ஸ் மருத்துவமனையில் போலி மருத்துவர் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த 19 வயதான அட்னான் குர்ராம் கடந்த ஐந்து மாதங்களாக மருத்துவர் என்ற போர்வையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் சுற்றி வந்துள்ளார். வெள்ளை கோட் மற்றும் ஸ்டெதஸ்கோப்புடன் வரும் அட்னான் குர்ராம் அனைவரிடமும் தன்னை ஒரு பயிற்சி டாக்டர் என அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார்.

2000த்திற்கும் அதிகமான பயிற்சி டாக்டர்கள் அங்கு இருப்பதால் அவரின் மீது அங்கு யாருக்கும் சந்தேகம் வரவில்லை. இந்நிலையில், சமீபத்தில் அங்கு நடைபெற்ற மருத்துவர்கள் பங்கேற்ற மராத்தான் போட்டியிலும் அட்னான் குர்ராம் கலந்து கொண்டுள்ளார். அப்போது, அதில் கலந்து கொண்ட மருத்துவர்கள் சிலர், இவர் மீது சந்தேகம் கொண்டு காவல்துறைக்கு புகாரளித்துள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் குர்ராம் ஒரு போலி மருத்துவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரது மருந்துகள் குறித்த அறிவு அவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து எய்ம்ஸை சேர்ந்த மருத்துவர் ஹர்ஜித் சிங் கூறுகையில், "குர்ராம் பலமுறை மருத்துவமனை வளாகத்தில் ஸ்டெதஸ்கோப்புடன் வளம் வருவதைப் பார்த்திருக்கிறேன். இங்கு 2000 மருத்துவர்கள் பணிபுரிவதால் அதில் யார் போலி என்பதைக் கண்டறிவது அவ்வளவு சுலபமல்ல. அதனைப் பயன்படுத்திக் கொண்டு குர்ராம் இத்தகைய செயலைச் செய்துள்ளார்.

கடந்த சனிக்கிழமையன்று மருத்துவர்கள் கலந்து கொண்ட மாரத்தானில் குர்ராம் பங்கேற்றார். அப்போது அவரிடம் மருத்துவர்கள் சிலர் அவரது அடையாளத்தைக் கேட்டுள்ளனர். அப்போது குர்ராமின் பதில் சந்தேகமளிப்பதாக இருந்ததையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.

இது வரையிலான போலீஸ் குற்ற ஆவணங்களில் குர்ராமின் பெயர் இல்லை என போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும் விசாரணையின் போது குர்ராம் தனது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஸ்டெதஸ்கோப், வெள்ளை கோட் அணிந்து பல புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் சில அரசியல் பிரமுகர்களிடம் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் கிடைத்துள்ளது.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon