மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

ஊழியர்களின் தாமத வருகை: முதல்வர் கண்டிப்பு!

ஊழியர்களின் தாமத வருகை: முதல்வர் கண்டிப்பு!

புதுச்சேரியிலுள்ள அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் தாமதமாகப் பணிக்கு வருகின்றனர் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவந்த நிலையில், இன்று (ஏப்ரல் 16) திடீரென தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி. மேலும், பணிக்குத் தாமதமாக வந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன்பாக நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில், அரசு ஊழியர்களும் அதிகாரிகளும் அலுவலகங்களுக்குச் சரியான நேரத்தில் வருவதில்லை எனப் புதுச்சேரி மாநில எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனால், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் கூறின. மேலும், தேவைக்கு அதிகமாக ஊழியர்கள் அரசுப் பணியில் உள்ளதாகவும், இதனால் நலத் திட்டங்களுக்குப் போதுமான நிதி ஒதுக்கப்படுவதில்லை எனவும் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. அப்போது, இது தொடர்பாக விளக்கமளித்த புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி, அரசு ஊழியர்கள் சரியான நேரத்துக்கு வர வேண்டுமென அறிவுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், புதுச்சேரி தலைமைச் செயலகத்துக்கு இன்று காலை 9.30 மணியளவில் வந்தார் நாராயணசாமி. அங்குள்ள ஒவ்வொரு துறை அலுவலகங்களுக்கும் சென்று ஆய்வு செய்தார். காலை 9 மணிக்குப் பணி நேரம் தொடங்கும் நிலையில், 9.30 மணி வரை 30 சதவீத ஊழியர்களே வந்திருப்பதைக் கண்டு கோபமுற்றார்.

அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நாராயணசாமி, பணிக்குச் சரியான நேரத்தில் வராத ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமென்று தெரிவித்தார்.

“நிர்வாகத்தில் ஒழுக்கத்தை, விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். ஊழியர்கள் அவர்களுடைய கடமையைச் சரிவரச் செய்ய வேண்டும். காலத்தோடு சம்பளம் இல்லையென்று கூக்குரல் இடுபவர்கள், காலத்தோடு வேலைக்கு வர வேண்டும். இன்னும் பல அலுவலகங்களுக்குச் சென்று ஆய்வு செய்து, காலத்தோடு வேலைக்கு வராத அரசு அதிகாரிகள் மீதும் ஊழியர்கள் மீதும் விரைவில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon