மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

பற்றி எரியும் பர்வத மலை!

பற்றி எரியும் பர்வத மலை!

பர்வத மலையில் நேற்றிரவு (ஏப்ரல் 15) முதல் பற்றி எரிந்துவரும் காட்டுத் தீயை அணைக்கத் தீயணைப்புத் துறையினர் போராடிவருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது பர்வத மலை. கொல்லிமலை, சுருளிமலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரிமலை எனப் புகழ்பெற்ற சித்தர் மலைகளைப் போல பர்வத மலையும் சித்தர்களால் புகழ்பெற்ற மலையாகும்.

இந்த மலையில் நேற்று இரவு முதல் காட்டுத் தீ பற்றி எரிந்துவருகிறது. காற்றின் வேகத்தால் தீ அனைத்துப் பகுதிகளுக்கும் பரவிவருகிறது. கரடு முரடான மலைப்பாதை வழியாக வாகனம் செல்ல இயலவில்லை. இதனால், காட்டுத் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத் துறையினர் போராடிவருகின்றனர். இந்த தீயில் அரிய வகை மூலிகை மரங்கள், செடிகள் கருகிவருகின்றன. அங்குள்ள பல்வேறு விலங்குகளும் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ளன.

பர்வத மலைக்கு நவிரமலை, தென்கயிலாயம், திரிசூலகிரி, சஞ்ஜீவிகிரி, பர்வதகிரி, கந்தமலை, மல்லிகார்ஜுனமலை, உள்ளிட்ட வேறு பெயர்களும் உண்டு. பர்வத மலை மீது பழமைமிக்க மல்லிகா அர்ஜீன பிரம்மாம்பிகை கோவில் உள்ளது. பர்வத மலையில் அரிய வகை மரங்களும், ஏராளமான மூலிகைச் செடிகளும் அதிக அளவில் உள்ளன.

வெள்ளியங்கிரி மலை, சதுரகிரி மலைகளுக்கு அமாவாசை அல்லது பௌர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்கள் செல்வார்கள். இறைவனுக்கு பக்தர்களே பூஜை செய்யலாம் என்பதால், பர்வத மலையில் எல்லா நாட்களும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் சிவ பூஜைக்குத் தேவையான பொருட்களுடன் செல்கின்றனர். நேற்று அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பர்வத மலையில் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம், திருப்பூர், ஈரோட்டைச் சேர்ந்த 12 பேர், சென்னையைச் சேர்ந்த 24 பேர் என மொத்தம் 36 பேர் கொண்ட குழுவினர் தேனி மாவட்டம் போடி அருகே மலையேற்றப் பயிற்சிக்குச் சென்றபோது, குரங்கணி காட்டுத் தீயில் சிக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 27 பேரில் சிகிச்சை பலனின்றி இது வரை 23 பேர் பலியாகியுள்ளனர். அதைத் தொடர்ந்து, கோடைக்காலம் முடியும் வரை மலையேற்றப் பயிற்சியை மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டது.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon