மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 29 நவ 2020

தமிழ் சினிமா: அப்செட்டான அரவிந்த் சாமி

தமிழ் சினிமா: அப்செட்டான அரவிந்த்  சாமி

தயாரிப்பாளர்கள் சங்க வேலைநிறுத்தத்தினால் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில், உடனே வேலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார் நடிகர் அரவிந்த் சாமி.

தமிழகத்தில் தொடர்ந்து சில காலமாக தொடர் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றுவருகின்றன. சினிமாவில் தொடங்கி காவிரி மேலாண்மை வரை போராட்டங்கள் நடந்தவண்ணம் உள்ளன. அந்த வகையில் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், டிஜிட்டல் நிறுவனங்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக தயாரிப்பாளர்கள் சங்க வேலைநிறுத்தப் போராட்டத்தால் மார்ச் 1ஆம் தேதி முதல் புதிய படங்கள் வெளியாவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் புதிய படங்களின் படப்பிடிப்புகளும், புதிய திரைப்படங்கள் வெளியீடும் தடை செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டன்று திரைப்படங்கள் வெளியாவது வழக்கமாகும். ஆனால் தற்போது தமிழ் திரைத் துறையில் நிலவிவரும் தயாரிப்பாளர் பிரச்சினை காரணமாக இந்தாண்டு ஒரு படம் கூட வெளியாகவில்லை. இது தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் அளிக்கும் மிகப் பெரிய ஏமாற்றமாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்தப் பிரச்சினை குறித்து நடிகர் அரவிந்த் சாமி தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், “நேர்மையாகச் சொன்னால் இந்த வேலைநிறுத்தம் சோர்வு அளிக்கிறது. எனக்கு வேலை செய்ய வேண்டும். ஏதாவது யோசனை இருந்தால் உடனே முன்னெடுங்கள். வேலைகளை ஆரம்பிக்கவும் படப்பிடிப்புக்களை நடத்தவும் உதவுங்கள். ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக இதற்குத் தீர்வு காணுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon