மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 29 நவ 2020

காரிலிருந்து எலெக்ட்ரிக் ஆட்டோவுக்குத் தாவும் ஓலா!

காரிலிருந்து எலெக்ட்ரிக் ஆட்டோவுக்குத் தாவும் ஓலா!

ஓலா நிறுவனம் அடுத்த 12 மாதங்களில் இந்தியாவில் சுமார் 10,000 எலெக்ட்ரிக் ஆட்டோக்களை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவில் குறைந்த கட்டணத்தில் டாக்ஸி போக்குவரத்துச் சேவைகளை வழங்கி வரும் நிறுவனம்தான் ஒலா. இந்தியாவில் ஓலாவுக்குக் கடினமான போட்டியை வழங்கி வரும் அமெரிக்காவின் உபேர் டாக்ஸி நிறுவனத்தைச் சமாளிக்கும் வகையில் ஓலா பல்வேறு சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகிறது. இந்நிறுவனம் இந்தியாவில் 2021ஆம் ஆண்டுக்குள் 10 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்த இலக்கு வைத்திருப்பதாக அறிவித்திருந்தது. அதன் முதற்கட்டமாக அடுத்த 12 மாதங்களில் இந்தியாவில் 10,000 மூன்று சக்கர ஆட்டோக்களை அறிமுகம் செய்வதாக ஏப்ரல் 16ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இப்பணிக்காக இந்தியாவின் பல்வேறு மாநில அரசுகளுடனும், வாகன உற்பத்தி நிறுவனங்களுடனும் பேட்டரி தயாரிப்பு நிறுவனங்களுடனும் இணைந்து செயல்பட ஆலோசித்து வருவதாக ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓலா ஆட்டோக்கள் ஏற்கெனவே இந்தியாவில் இயங்கி வரும் நிலையில் அவற்றைத் தரம் உயர்த்தும் முயற்சியாக அவை எலெக்ட்ரிக் மயமாக்கப்படுகின்றன. இதனால் சுற்றுச் சூழல் மாசுபாடு குறையும் என்பதோடு, மக்களின் பயணமும் எளிதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசானது 2030ஆம் ஆண்டுக்குள் அனைத்து வாகனங்களையும் எலெக்ட்ரிக் மயமாக்க இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில் ஓலாவின் இந்த முயற்சி வரவேற்பைப் பெற்றுள்ளது.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon